தமிழக சுற்றுலாத்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாப் பயணத்தை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக சுற்றுலாத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 15 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை முக்கியமான இடங்களுக்கு இலவச விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்வதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமை வகித்துப் பேசினார்.
இந்த சுற்றுலாப் பயணத்தை மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு பகுதிக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ லூர்துசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை சார்பில் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தில் பங்கு கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பை மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டன. சுற்றுலாப் பணியாளர்கள், முன்னாள் சுற்றுலா அலுவலர் ராமதாஸ் உள்ளிட்டோர் மாணவர்களை அழைத்துச் சென்றனர்.
மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றிப் பார்த்த பின்னர், மாணவர்கள் முட்டுக்காடு படகுத் துறை , சதுரங்கப்பட்டினம் கோட்டை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலாத் துறை பேருந்துகள் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்தனர்.
No comments:
Post a Comment