ட்ரெண்ட்டிற்கு ஏற்ப சில புதிய அப்டேட்களை அறிமுகம் செய்திருக்கிறது வாட்ஸ்அப். இதில் சில வசதிகள் ஏற்கெனவே வந்துவிட்டன; நீங்கள் ப்ளே ஸ்டோரில் ஆப்பை அப்டேட் செய்தால் இப்போதே பார்க்கலாம்; சில வசதிகள் மட்டும் சோதனை முயற்சியில் இருக்கின்றன. அவை சில பீட்டா யூசர்களுக்கு மட்டும் தெரியும். சரி... புதிதாக என்னென்ன வசதிகள் வாட்ஸ்அப்பிற்குள் வந்துள்ளன எனப் பார்ப்போம்.
1. ஸ்வைப் டு ரிப்ளை
க்ரூப்பிலோ அல்லது தனியாக சாட்டிலோ ஒருவரின் மெசேஜிற்கு நேரடியாக ரிப்ளை செய்யவேண்டுமென்றால் இதுவரை ஒரேவழி, அந்த மெசேஜைத் தேர்வுசெய்து சில நொடிகள் அழுத்திப்பிடிப்பதுதான். இப்படிச் செய்தால் உடனே டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான கீ-போர்டு தோன்றும். உடனே மெசேஜ் டைப் செய்வோம். இப்படி மெசேஜை தேர்வு செய்ய, அதை அழுத்திப் பிடிக்க, கீ-போர்டு தோன்ற என ஒரு ரிப்ளைக்கு குறைந்தது மூன்று விநாடிகளாவது தேவைப்படும். ஆனால், இந்த ஸ்வைப் டு ரிப்ளை மூலம் ரிப்ளை செய்ய ஒரு நொடி கூட ஆகாது. எந்த மெசேஜிற்கு ரிப்ளை செய்யவேண்டுமோ, அந்த மெசேஜை வலதுபுறம் ஸ்வைப் செய்தாலே போதும். அடுத்த கணமே கீ-போர்டு பாப்அப் ஆகி, டெக்ஸ்ட் ரைட்டர் வந்துவிடும். எளிதாக ரிப்ளை செய்துவிடலாம்.
வாட்ஸ்அப் ஸ்வைப் டு ரிப்ளை
இந்த வசதி க்ரூப் சாட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று. இதற்கு முன்பே ஐ.ஓ.எஸ் வெர்ஷன்களில் இந்த வசதி இருந்தது. தற்போது முதல்முறையாக ஆண்ட்ராய்டிற்கும் கொண்டுவந்திருக்கிறது வாட்ஸ்அப். ஆப்பை அப்டேட் செய்தால் இப்போதே இந்த வசதி வந்துவிடும்.
2. பிக்சர் இன் பிக்சர் Mode
இதுவரைக்கும் வாட்ஸ்அப் சாட்களுக்குள் இருக்கும் ஸ்ட்ரீமிங் லிங்க்குகளைத் திறந்தால், அவை பிரவுசரில்தான் ஓப்பன் ஆகும். நேரடியாக டவுன்லோடு செய்யப்பட்டு அனுப்பப்படும் வீடியோக்கள் மட்டுமே வாட்ஸ்அப்பில் ப்ளே ஆகும். இதுவே யூடியூபோ இன்ஸ்டாகிராமாகவோ இருந்தால் அது அந்த ஆப்பிற்கு அழைத்து செல்லும். நேரடியாக வீடியோவைப் பார்க்க முடியாது. ஆனால், தற்போது இதற்கு ஒரு தீர்வுகண்டுள்ளது வாட்ஸ்அப். அதுதான் இந்த பிக்சர் இன் பிக்சர் இன் மோடு.
பிக்சர் இன் பிக்சர் மோடு
இதன்படி யூடியூப் வீடியோக்களை அப்படியே வாட்ஸ்அப்பிலேயே ப்ளே செய்யலாம். இதேபோல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் வாட்ஸ்அப்பிற்கு உள்ளேயே ஸ்ட்ரீம் செய்யமுடியும். இப்படி ஸ்ட்ரீம் ஆகும் வீடியோக்களை டிஸ்ப்ளேயின் மீது ஆங்காங்கே நகர்த்திக்கொள்ளவும் முடியும். இந்த வீடியோ ஸ்ட்ரீமிங்கில் வீடியோவை ப்ளே செய்ய, நிறுத்த மற்றும் முழு ஸ்க்ரீன் மோடிற்கு மாறுவதற்கான ஆப்ஷன்கள் இருக்கும். இதுவும் ஏற்கெனவே ஐ.ஓ.எஸ் யூசர்களுக்கு இருந்தவசதிதான்.
3. வாட்ஸ்அப் பேமன்ட்
UPI மூலமாக வாட்ஸ்அப்பிலேயே பணம் பெறுவதற்கும், அனுப்புவதற்கும் உதவும் வசதிதான் இந்த வாட்ஸ்அப் பேமன்ட். சில வாரங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி குறிப்பிட்ட சில பீட்டா யூசர்களுக்கு மட்டுமே வந்துள்ளது; இன்னும் இதற்கான பணிகள் முழுமையடையாததால் அனைவருக்கும் வருவதற்கும் இன்னும் சில நாள்கள் ஆகலாம். இப்போதைக்கு பீட்டா யூசர்கள் மட்டும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.
பேமன்ட் வசதி
இதற்கு வங்கி அக்கவுன்ட் விவரங்களோ, ஆன்லைன் வங்கி கணக்கோ எதுவும் தேவையில்லை. நாம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் எண் ஏதேனும் ஒரு வங்கியுடன் இணைந்திருந்தாலே போதும்; UPI மூலம் அதை எடுத்துக்கொள்ளும். பின்னர் நம் கான்டாக்டில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பமுடியும். நாம் யாருக்கு பணம் அனுப்பவேண்டுமோ அவரின் சாட் பாக்ஸிற்கு சென்று, அட்டாச்மென்ட் பகுதியைத் தேர்வுசெய்தால், Payment என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதைத் தேர்வு செய்தால் உடனே பணம் அனுப்பிடமுடியும். இதிலிருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால் நம் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே பணம் அனுப்பமுடியும். பணம் வெற்றிகரமாக சேர்ந்துவிட்டால் பணம் அனுப்பியவருக்கும், பெற்றவருக்கும் வாட்ஸ்அப் சாட்டிலேயே மெசேஜ் ஒன்று காட்டப்படும். அதைவைத்து உறுதிசெய்துகொள்ளலாம். ஒருவேளை வாட்ஸ்அப் பேமன்ட் அமோக வரவேற்பை பெற்றால் கூகுள் பே, பேடிஎம், அரசின் பீம் ஆப் போன்றவற்றின் பயன்பாடுகள் குறையலாம்.
4. ஸ்டேட்டஸ் விளம்பரம்
இலவச சேவைகள் அனைத்திற்கும் ஜீவாதாரமாக இருப்பது விளம்பரங்கள்தான். ஆனால், வாட்ஸ்அப் மட்டும் அதற்கு விதிவிலக்கு. ஆனால், எதிர்காலத்திலும் அப்படி இருக்காது. கூடியவிரைவில் வாட்ஸ்அப்பிற்கு உள்ளே ஸ்டேட்டஸ்களுக்கு இடையில் விளம்பரங்கள் வரப்போகின்றன. 2.18.303 பீட்டா வெர்ஷனிலிருந்து இதைத் தொடங்கவிருக்கிறது வாட்ஸ்அப். ஸ்டேட்டஸ்களில் ரயில் விடுபவர்கள்தான் வாட்ஸ்அப்பிற்கு இப்போதைய நம்பிக்கை. இவர்கள்தான் வாட்ஸ்அப் விளம்பரங்களை வாழவைக்க வேண்டும்.
எத்தனை ஸ்டேட்டஸ்களுக்கு ஒருமுறை விளம்பரம் வரும், நமக்கான விளம்பரங்களை எப்படி டிராக் செய்யும், End to End என்கிரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பில் பயனாளர்களை எளிதாக டிராக் செய்யமுடியுமா என இதிலும் நிறைய கேள்விகள் எழுகின்றன. வாட்ஸ்அப் என்ன செய்கிறது எனப்பார்ப்போம்.
5. ஸ்டிக்கர்கள்
இதுவும் இப்போதைக்கு பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. இதனை WABetainfo தளம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்டிக்கர் வசதிக்கு இப்போதைக்கு பிஸ்கட் எனப் பெயர் வைத்திருக்கிறது வாட்ஸ்அப். முதலில் இமோஜிக்களை மட்டுமே கொடுத்த வாட்ஸ்அப் அதன்பிறகு Giphy-ன் உதவியுடன் Gif வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது அடுத்ததாக ஸ்டிக்கர் வசதியைக் கொண்டுவரவிருக்கிறது. இந்தியாவில் ஸ்டிக்கர் வசதியானது ஹைக் ஆப் மூலம் ஏற்கெனவே அதிக வரவேற்பு பெற்ற ஒன்று. எனவே வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுக்கும் மவுசு இருக்கும்.
ஸ்டிக்கர்கள்
இந்த ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப் ஆப்போடு இணைந்து டவுன்லோடு ஆகுமா, தனி ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோடு செய்ய வேண்டியதிருக்குமா அல்லது ப்ளே ஸ்டோரில் தனி ஆப் எதுவும் இதற்காக விடப்படுமா என இதுகுறித்து நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. வாட்ஸ்அப் முறையாக வெளியிட்டால் மட்டுமே இது எப்படி செயல்படும் எனத் தெரியவரும்.
6. இமேஜ் நோட்டிஃபிகேஷன்கள்
இப்போது வாட்ஸ்அப்பில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் அனைத்தும் வெறும் டெக்ஸ்ட்டாக மட்டும்தான் வருகின்றன. இதை இமேஜ் நோட்டிஃபிகேஷன்களாக மாற்றவிருக்கிறது வாட்ஸ்அப். உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் உங்களுக்கு ஒரு போட்டோ அனுப்பினால், நோட்டிஃபிகேஷனில் 'நியூ மெசேஜ்' என்பதோடு அந்தப் படமும் சிறிய அளவில் இடம்பெற்றிருக்கும். தேவைப்பட்டால் அந்த நோட்டிஃபிகேஷனை விரிவுபடுத்தி அந்தப் படத்தைப் பார்க்கலாம். அல்லது நேரடியாக வாட்ஸ்அப்பிற்குள் வரலாம். ஏற்கெனவே பெரும்பாலான ஆப்களில் இருக்கும் புஷ் நோட்டிஃபிகேஷன்கள் போலத்தான் இதுவும். ஆனால், வாட்ஸ்அப்பிற்கு மட்டும் இது புதுசு. இந்த வசதியும் பீட்டா டெஸ்ட்டிங்கில்தான் இருக்கிறது
No comments:
Post a Comment