நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா? அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.
சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.
வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?
வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.
வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.
வெதுவெதுப்பான வெந்தய நீர்
வெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.
முளைக்கட்டிய வெந்தயம்
வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெந்தயத்தை முளைக்கட்டச் செய்வது எப்படி?
முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.
பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.
நீரில் ஊற வைத்த வெந்தயம்
ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.
வெந்தயம் மற்றும் தேன்
ஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.
வெந்தய டீ
வெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும். குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்
No comments:
Post a Comment