வருகிற 6 மற்றும் 7ம் தேதிகளில் ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகள் நடைபெறுவதால் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த தேர்வு நாடுனர்கள், எதில் பங்கேற்பது என்பதை முடிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் உதவியாளர் பணிக்கும், கிராமிய வங்கிகள் எழுத்தர் பணிக்கும் 6 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கிராமிய வங்கிகள் எழுத்தர் பணிக்கு முதற்கட்டமாக முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிந்து, பிரதான தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன உதவியாளர் பணிக்கு வருகிற 7ம்தேதி தேர்வு நடைபெறுவதாக விண்ணப்பதாரர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ வந்துள்ளது.
அதேபோல் கிராமிய வங்கிகளின் எழுத்தர் பணிக்கான பிரதான தேர்வும் அதே தேதியில் நடக்கிறது. ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெற உள்ளதால் இரண்டுக்கும் விண்ணப்பித்தோர் திண்டாட்டத்தில் உள்ளனர். இதேபோல் வருகிற 6ம் தேதி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள ‘புரபஷனரி ஆபீசர்’ பணிக்கான முதல்நிலை தேர்வு நடக்கிறது. அதே நாளில் நியூ இந்தியா அஷ்யூரன்சின் உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வும் நடக்கிறது. இதனால் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த பட்டதாரிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். பொதுவாக போட்டித் தேர்வுகளை மத்திய, மாநில அரசுகளின் பணியாளர்கள் தேர்வாணையம் மட்டுமின்றி, எல்ஐசி பணியாளர்கள் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகிய அமைப்புகளும் நடத்தி வருகின்றன.
அடிக்கடி தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என கடினமாக இரவு பகலாக உழைப்பவர்கள் திண்டாடுகின்றனர். பட்டம் பெற்று முடித்த பல பட்டதாரிகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட நூலகம் மற்றும் தனியார் கோச்சிங் மையங்களில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக புத்தகங்களை பெற்று படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே சமயத்தில் நடக்கும் தேர்வுகள் சிக்கலை உருவாக்குகிறது. அரசுப் பணிகளுக்கான வாய்ப்புகள் அருகி விட்ட தற்போதைய சூழ்நிலையில், ஒரே தேதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடைபெறாத வகையில் தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தேர்வாணையங்கள் இதுகுறித்து கலந்தாலோசித்து தேர்வு நடத்தினால் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தேர்வு நாடுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசு வேலைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள அதுவே வசதியாக இருக்கும்.
கடந்த மாதமும் இரு தேர்வு
கடந்த செப்.30ம் தேதி எஸ்ஐ (டெக்னிக்கல்) பணிக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. அன்று கிராமிய வங்கிகளுக்கான புரபஷனரி ஆபீசர் பணிக்கு பிரதான எழுத்துத்தேர்வும் நடந்தது. இதனால் பலர் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வை எழுதி சென்றது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment