எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறைகளில் செயல்படும் கல்வி மாவட்ட அலுவலகங்கள்

Tuesday, October 30, 2018


தமிழகத்தில் புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அதற்குரிய அலுவலகங்கள், போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் கலைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் இருந்த 32 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர் மற்றும் ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள்,மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டன.

இதனையடுத்து,புதிதாக 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை, 67ல் இருந்து, 119 ஆக அதிகரித்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான புதிய அலுவலகங்கள் அமைக்கப்படவில்லை. இதே போல் போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த பணிகள் தடைபட்டுள்ளன. இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:தமிழக பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை, லேப்டாப், பள்ளி சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் உள்பட 16 வகையான இலவச திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திட்டங்களுக்கும் தனித்தனியாக புள்ளி விவரங்களை இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும்.



மேலும்,அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சம்பள பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகமே பொறுப்பாகும். ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட 52 கல்வி மாவட்டங்களுக்கு தனியாக பணியாளர்கள்  யாரும் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 100கண்காணிப்பாளர், 52 பள்ளி துணை ஆய்வாளர்,52 நேர்முக உதவியாளர் பணியிடம் உள்பட சுமார் 350க்கும் மேற்பட்ட முக்கிய  பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தை பொறுத்தவரை, ஒரு மாவட்ட கல்வி அலுவலர், ஒரு பள்ளித்துணை ஆய்வாளர் (பட்டதாரி ஆசிரியர் நிலை), ஒரு நேர்முக உதவியாளர் (அமைச்சுப்பணி), 2 பிரிவு கண்காணிப்பாளர், 2 இருக்கை பணி கண்காணிப்பாளர், 4 உதவியாளர், 4 இளநிலை உதவியாளர், ஒரு தட்டச்சர், ஒரு பதிவறை எழுத்தர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு டிரைவர் என மொத்தம் 20 பணியிடங்கள் உள்ளன.



போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், நாள்தோறும் புதுப்புது திட்ட அறிவிப்பை வெளியிட்டு வருவது வேதனை அளிக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையால்,ஒருவரே பல பணிகளை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அதற்கான தனி அலுவலகம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், அரசு பள்ளிகளின் வகுப்பறைகளே, பெரும்பாலும் மாவட்ட கல்வி அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒரு அலுவலகத்திற்கு தேவையான கணிப்பொறி,பிரிண்டர், இணையம் வசதி, பீரோ, மேசை, டேபிள், மின்விசிறி போன்ற எந்தவித தளவாட பொருட்களும் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One