அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்த தடை விதித்து தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழாக்கள் மற்றும் விளையாட்டு விழா, கலாச்சார விழா போன்றவை நடத்தப்படுகிறது. அப்போது, நடன போட்டிக்கு அதிக ஒளி கொண்ட மின்விளக்குகளை பயன்படுத்தி மேடை அமைக்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அரசு ஆரம்ப பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் அதிகபடியான மின் வெளிச்சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சைத்துறை டாக்டர்கள் ஆய்வு செய்தனர். அப்போது எதிர்காலத்தில் பள்ளிகளில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பாடாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் பள்ளிகளில் ஆண்டுவிழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் நடைபெறும்போது, அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட மின்சாதன அமைப்புகள் மட்டுமே அமைத்திட வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் விழா நடத்தி, பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்தபள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர்வாகமுமே முழுபொறுப்பேற்க நேரிடும். எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றறிக்கையாக இந்த தகவலை அனுப்பி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment