எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இயற்கை உர தயாரிப்பில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி

Wednesday, October 31, 2018



'விவசாயம் செய்ய அடுத்த தலைமுறையும் தயார்' என்பதற்கான நல்ல அறிகுறியாக, அரசுப் பள்ளி மாணவி மித்ரா திகழ்கிறார்.

திருவாரூர், மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பவர், மித்ரா. அவரைப் பற்றி பள்ளியின் ஆசிரியர் மணிமாறன் சொல்லும்போது, "மாணவர்களைக் களப்பணிக்கு அழைத்துச்செல்வது எங்கள் பள்ளியில் அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படித்தான் இயற்கை விவசாயி சித்தன் அவர்களைச் சந்திக்க, அழைத்துச்சென்றேன். அவர் கூறிய பல விஷயங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார்கள். அவர்களில் ஒருவரான மித்ரா, 'அந்த ஐயா கூறிய பஞ்சகவ்யத்தை நானே தயாரிக்கிறேன்' என்றார். சொன்னபடியே செய்துகாட்டியுள்ளார். அதுபற்றி, மித்ராவிடமே கேளுங்களேன்" என்றார் பெருமிதத்துடன்.


"சித்தன் ஐயா, பஞ்சகவ்யம் செய்யக் கற்றுக்கொடுத்தார். முதலில், ஒரு மண்பானையைக் கழுவி, ஈரமான மண்ணில் வெச்சேன். அதில், வேப்பிலை, சோற்றுக்கற்றாழை, ஆடாதொடை, கருந்துளசி போன்ற வாசனை இலைகளைப் போட்டேன். ரெண்டரை லிட்டர் மாட்டுக் கோமியத்தை அதில் ஊற்றி, இறுக்கமாக மூடினேன். அடுத்த நாள் பானையைத் திறந்து கிளறிவிட்டேன். இப்படிச் செஞ்சா, ஒரு வாரத்தில் அந்த இலைகள் மக்கிடும். அப்புறம், திறந்துபார்த்தால், ஒன்றிரண்டு இலைகளுடன் முழுக்கத் தண்ணீராக இருக்கும்.

அதிலிருந்து சில மூடி அளவை ஸ்ப்ரேயரில் எடுத்துக்கிட்டு, நீர் ஊற்றிக் கலந்து வயலில் தெளிச்சேன். கொசுக்கள், பூச்சுகளின் தொல்லை போச்சு. சில நாள் கழிச்சுப் பார்த்தப்போ, பயிர்களில் பூச்சிகளே இல்லை. இதை முதலில் எங்க வயலில் செஞ்சு பார்த்தேன். இனி, தெரிந்தவர்களின் வயல்களிலும் தெளிக்கப்போறேன். என்கிட்டேயிருந்து விலைக்கு வாங்கிக்கிறதாவும் சிலர் சொல்லியிருக்காங்க. இன்னும் தயாரிச்சு, குறைஞ்ச விலைக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன். ஏன்னா, விவசாயம் செய்வதற்கான பொருள்களின் விலை ஏறினால், விவசாயம் செய்றவங்களுக்கு கஷ்டம்தானே?" என யதார்த்தமாகப் பேசுகிறார் மித்ரா.

இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், இயற்கை களைக்கொல்லிகளையும், மண்புழு உரமும் தயார்செய்கிறார்கள். விவசாயத்தைக் காக்கும் நல்ல பணியைச் செய்யும் பள்ளிக்கு, வாழ்த்துகளைச் சொல்வோம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One