புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் வியாழக்கிழமை (அக். 4) தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பான ஊதிய பிடித்தம் போன்ற எச்சரிக்கைகளுக்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பாக வரும் நவம்பர் 27 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
அதற்கு ஆயத்தமாகும் வகையில் வியாழக்கிழமை (அக்.4) ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு (அனைத்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) அறிவித்துள்ளது. இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்: தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் துறைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு மீண்டும் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி உரிய காரணங்களோ, அனுமதியோ இல்லாமல், தற்செயல் விடுப்பு எடுப்போருக்கு அன்றைய தினத்துக்கான ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்செயல் விடுப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நாளில் ஊழியர்களின் வருகை குறித்த விவரங்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
போராட்டம் நடைபெறும்: இதனிடையே, தற்செயல் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற எச்சரிக்கையை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கு.தியாகராஜன் கூறும்போது, எங்களுடைய போராட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை மிகத் தீவிரமாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கு பெறுவர் என்றார்
No comments:
Post a Comment