தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நவீனமயமாக்கப்பட்ட பிரி கே.ஜி.வகுப்புகள் வீதம் மாநில அளவில் 32 பள்ளிகளில் துவக்கப்படவுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவீன பிரி கே.ஜி.வகுப்பு துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன பிரி கே.ஜி.வகுப்பிற்கு 3 அறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அறைகளின் சுவர்களில் குழந்தைகள் விரும்பும் வகையிலான படங்கள் வரையப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு நிலைகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது அதிகமாக தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும் பிரி கே.ஜி., எல்.கே.ஜி, யூ.கே.ஜி., போன்ற வகுப்பிற்கு தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியநிலை உள்ளது. கே.ஜி.வகுப்பிற்காக தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அங்கேயே உயர்கல்வி வரை படிக்கின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கே.ஜி.வகுப்புகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் துவங்கப்படவுள்ளது. இதற்கான வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கான திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக பிரி.கே.ஜி. பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment