சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, 2017, நவம்பரில், தேர்வு நடத்தப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 10 நாட்களுக்கு முன், தேர்வு முடிவு வெளியானது.இதில், பல தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரச்னை எழுந்தது. அதிருப்தி அடைந்த தேர்வர்கள், ஒரு வாரத்திற்கு முன், சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், முதல்வரின் தனி பிரிவுக்கும், கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் மனு அளித்திருந்தார்
. மனுவில், 'தையல், ஓவியம் ஆகிய பாடப் பிரிவுகளில், பல தேர்வர்கள் தவறான சான்றிதழ்களை காட்டி, பணி நியமன உத்தரவு பெற்றுள்ளனர்; எனவே, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்' என, கோரியிருந்தார்.இது குறித்து, டி.ஆர்.பி., துணை இயக்குனர் கையெழுத்திட்ட கடிதம், மனுதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும், மீண்டும் அவர்களின் சான்றிதழ் படிவம் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே, நியமனம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
அதேபோல, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதோரிடம், டி.ஆர்.பி., தரப்பில், கடிதங்கள் பெறும் பணியும் துவங்கியுள்ளது
No comments:
Post a Comment