ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன நடவடிக்கைகளை, டி.ஆர்.பி., மேற்கொண்டு வருகிறது. ஆனால், 2014க்கு பின், டி.ஆர்.பி.,யின் தேர்வு நடவடிக்கைகள் சர்ச்சையாகி வருகின்றன.
இதில், உச்சகட்டமாக, 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமன தேர்வில், போலியாக மதிப்பெண் வழங்கியது; ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிலர், போலி மதிப்பெண் பெற்றது போன்ற பிரச்னைகள், டி.ஆர்.பி.,க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை போலீசார் கிரிமினல் வழக்கு, பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த சிறப்பாசிரியர் பணி நியமன தேர்விலும் பிரச்னை ஏற்பட்டது. இந்த தேர்வுக்கு, சரியான கல்வி தகுதியை நிர்ணயிக்க தவறியதால், சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும் குளறுபடி ஏற்பட்டது.அதனால், தேர்வர்கள் நாள்தோறும், டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்துவதும், மனு கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.இந்நிலையில், ஊழல் பிரச்னைகள் மற்றும் நியமன குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் வகையில், டி.ஆர்.பி., அலுவலகம் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நான்காம் மாடியில் இயங்கும், டி.ஆர்.பி., அலுவலக வாயிலில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அலுவலகத்துக்கு வரும் தேர்வர்கள் மற்றும் தேர்வு சார்ந்த மனுக்களை அளிக்க வருவோர், போலீசார் வசம் உள்ள பதிவேட்டில் எழுதி, முன் அனுமதி பெற்று இருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பெரும்பாலான தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே மனுக்களை பெற்று, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
No comments:
Post a Comment