பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில், 10 வயதுக்குள்பட்ட 102 மாணவிகளுக்கு அஞ்சலக தொடர் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார் அஞ்சலக அலுவலர் ராஜூ.
இதுகுறித்து அவர் தலைமை அஞ்சலகத்தில் மேலும் கூறியது:
பெண் குழந்தைகளுக்களின் பாதுகாப்புக்காகவும், திருமணத்துக்காகவும் மாதம்தோறும் சேமிக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பாரத பிரதமர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் தலைமை அஞ்சல் நிலையத்தின் மூலம் ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் இந்திரா உத்தரவின் பேரில், பெரம்பலூர் கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆர்.சி. பாத்திமா தொடக்கப்பள்ளி, ரோவர் தொடக்கப்பள்ளி மற்றும் முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் பயிலும் 10 வயதுக்குள்பட்ட 102 பெண் குழந்தைகளுக்கு ஒரே நாளில் மாதாந்திர தொடர் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு கணக்கை பெற்றோர் தங்களது 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அஞ்சலகங்களில் தொடங்கி, மாதந்தோறும் பணம் செலுத்தி, ஆண்டுக்கு ரூ. 250 முதல் ரூ. 1.50 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த சேமிப்பு திட்டத்துக்கு 8.5 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. எனவே, இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ் வரும் பெண் குழந்தைகள் தங்களது 21 ஆவது வயதில் சேமிப்புத் தொகையை முதிர்ச்சியுடன் பெறலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment