அரசு பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு பதிவுகளை, வரும், 25ம் தேதிக்குள் முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர முடியும். தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, தனியார் பள்ளி மாணவர்கள், பல லட்சம் ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களில், 'டியூஷன்' எடுக்கின்றனர்.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 412 மையங்களில், தினமும் நேரடி வகுப்பு மற்றும் 'வீடியோ கான்பரன்ஸ்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதற்கிடையில், நீட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவை, நவ., 1ல், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., துவக்கியது.
இதில் விண்ணப்பிப்பது தொடர்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்களே பதிவு செய்து தர, பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது.இந்த உத்தரவை பின்பற்றி, 25ம் தேதிக்குள், நீட் பதிவு பணிகளை முடித்து, மாணவர்கள் பட்டியலை ஒப்படைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment