'நீட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வு, 2019 மே, 5ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று காலை, 11:30 மணிக்கு தான் துவங்கியது; வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணத்தை, டிச., 1 இரவு, 11:30 மணி வரை செலுத்தலாம்.
நேரம் மாற்றம்:
இந்த ஆண்டு நீட் தேர்வு, மே, 6, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடந்தது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை என, மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
* ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். 'ஆதார்' எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம்
* ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
* தேர்வு மையத்துக்குள், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்
* சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், மத்திய அரசு நடத்தும், தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் 2 முடித்தவர்கள், நீட் தேர்வு எழுத தகுதிஇல்லை. பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம். குறைந்தபட்ச வயது, 17; அதிகபட்ச வயது, 25 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
* இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநில பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும். பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை, ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment