பள்ளிக்கு வரும் மாணவிகள் பூ வைக்கக் கூடாது; கொலுசு போடக் கூடாது; மருதாணியும் வைக்கக் கூடாது' - இவையெல்லாம், பள்ளிக்கல்வி முதன்மை அதிகாரிகளால் நேற்றைக்குப் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள விஷயங்கள்... இந்தக் கட்டுப்பாடுகள் தனியார் பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மேலே சொல்லப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரப்போகிறது. பெண் குழந்தைகளின் சின்னச் சின்ன சந்தோஷங்களான பூவையும், மருதாணியையும் `வைக்காதீர்கள்' என்று கட்டுப்பாடு விதிப்பதற்குப் பின்னால் ஏதாவது நியாயங்கள் இருக்கின்றனவா? அல்லது இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளே நியாயம் கிடையாதா? தெரிந்துகொள்ள குக்கூ காட்டுப்பள்ளியின் ஆசிரியர் உதயலட்சுமி மற்றும் கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் சங்கீதாவிடமும் பேசினோம். ஆசிரியை சங்கீதா பேசியதாவது...
``இந்தக் கட்டுப்பாடு ரொம்ப ரொம்ப நல்லது. டீன் ஏஜில் பெண் குழந்தைகள் பூ, மருதாணி, கொலுசு என்று இருப்பது பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இது பாலியல் தொடர்பான ஆர்வங்கள், சந்தேகங்கள் உருவாக ஆரம்பிக்கிற வயது என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் மறந்துவிடக் கூடாது. என் அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். பள்ளிக்கூட வாசல்வரைக்கும் தலை நிறைய பூவோடு வரும் டீன் ஏஜ் மாணவிகள், அதன் பிறகு அதைக் கழட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டுத் தண்ணீர் தெளித்து வைத்துவிடுவார்கள். மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போகும்போது அந்தப் பூவை ஃபிரெஷ்ஷாக தலையில் வைத்தபடி கிளம்புவார்கள். இதுவரைக்கும் நல்ல விஷயம்தான். இதில் சில பெண் பிள்ளைகளுக்காக வாசலில் யாரோ ஒரு பையன் காத்திருக்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. பள்ளிப் பருவம் அதற்கான வயதா?
ஆசிரியர் சங்கீதா
மருதாணி வைப்பதில் என்ன பிரச்னை என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அந்த மருதாணி டிசைனுக்குள் மனதுக்குப் பிடித்த ஹீரோ பெயரையோ அல்லது ஒரு ஆணின் பெயரையோ எழுதிக்கொண்டு வரும் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைப் பார்த்தால் உங்கள் மனது எப்படி வலிக்கும்? எனக்கு வலித்திருக்கிறது. நல்லது கெட்டது அறியாத வயது என்பதால் இதெல்லாம் ஒரு மாணவியிடமிருந்து அப்படியே இன்னொரு மாணவி என்று பரவக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.
சினிமா, டி.வி.,ஸ்மார்ட் போன், சமூக வலைதளங்கள் என்று டீன் ஏஜ் பெண் குழந்தைகளின் மனதை அலைபாய வைக்க இன்றைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இத்தோடு சேர்ந்து கொள்கிறது டீன் ஏஜ் வயதுக்கே உரிய வயதுக்கோளாறுகள். இதையெல்லாம் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் சொல்லலாம் என்று ஆசிரியர்களான நாங்கள் அழைத்தால், `நம்ம பிள்ளைங்க பத்தி புகார் சொல்ல கூப்பிடுறாங்க' என்று பெற்றோர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. பள்ளிக் கல்வித்துறையே இப்படிக் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பெற்றோர்களுக்கும் இதுபற்றிய விழிப்புஉணர்வு வரும். அதனால் இந்தக் கட்டுப்பாடு நல்லது'' என்று தன் கருத்தைப் பேசி முடித்தார் ஆசிரியர் சங்கீதா.
குக்கூ உதயலட்சுமி
அடுத்து பேசிய குக்கூ பள்ளி ஆசிரியர் உதயலட்சுமி, ``பூ, கொலுசு, மருதாணி எல்லாம் பாலியல் சிந்தனையைத் தூண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இதற்குத் தீர்வு, முறையான பாலியல் கல்விதானே தவிர, `பூ வைச்சுக்காதே; மருதாணி வைச்சுக்காதே' என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. எல்லாம் வசதிகளும் கிடைக்கிற நகரத்துக் குழந்தைகளிடம், `பூ வைச்சுக்காதே மருதாணி வைச்சுக்காதே' என்று சொன்னால், அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடலாம். ஆனால், எந்த வசதியும் கிடைக்காத, அனுபவிக்காத குக்கிராமத்து மாணவிகளின் சின்னச் சின்ன சந்தோஷங்கள் பூக்கள் வைத்துக்கொள்வதும், கொலுசு அணிந்துகொள்வதும்தான். இதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தால் அந்தக் குழந்தைகள் எதில்தான் சந்தோஷப்பட முடியும் சொல்லுங்கள்? சரி, மாணவிகளுக்குச் சொல்லப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் ஆசிரியைகளுக்கும் உண்டா? அவர்களும் பூ வைத்துக்கொள்ளாமல், கொலுசு அணிந்துகொள்ளாமல் மாணவிகளுக்கு ரோல் மாடல்களாக இருப்பார்களா?'' என்று காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார்.
பூக்கள், மருதாணி, கொலுசு இவற்றையெல்லாம்விட ஒரு மாணவிக்கு அழகு தருவது நல்ல கல்வி மட்டுமே என்பதுதான் நம் கருத்து!
Correct....
ReplyDelete