விடுமுறையின் போது போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 15 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான (நீட் மற்றும் ஜேஇஇ) பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மையத்தில் 180 பேரும், ஓ.சி.பி.எம். பள்ளி மையத்தில் 200 பேர் வரையிலும் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி வகுப்புகளை நடத்த மையத்துக்கு தலா 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் வரவில்லை என்ற புகார் எழுந்தது. போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு ஆசிரியர்களை வரவழைப்பதற்கு ஆசிரியர்கள் சங்கத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் வரவில்லை. இதனால் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது போட்டித் தேர்வுகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 50 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நோட்டீஸுக்கு உரிய பதிலை ஆசிரியர்கள் வழங்காவிடில் விதிமுறைப்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
No comments:
Post a Comment