பெரும்பாலான பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்ற குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த வகுப்புகள் நடத்துவதை உறுதி செய்வதில் கல்வித் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக கல்வித் துறைக்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. வாரம் ஒரு வகுப்பு நீதிபோதனைக்கு என ஒதுக்கப்பட்டு அதன்மூலம் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்துக்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைப்பிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன. இதனால் தவறு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
காலப்போக்கில் இந்த வகுப்புகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இந்த வகுப்புகளுக்காக செலவிடப்பட்ட நேரத்தை பெரும்பாலான பள்ளிகளில் பாட வேளையாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக, மாணவர்களிடையே மீண்டும் ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
செல்லிடப்பேசி, இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்குதல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பக்குவம் மாணவர்களிடம் இருப்பதில்லை. கல்வியறிவற்ற பெற்றோர் சிலரால் இதுதொடர்பாக கேள்வி எழுப்பவும் இயலுவதில்லை. இதனால், இளம் வயதிலேயே மாணவர்களின் மனநிலை சீர்கெட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே மதுஅருந்துதல், காதல் வயப்படுவது, ஜாதி மோதல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினால் மாணவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளை பெற்றோர்தான் கவனிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், அரசு உத்தரவுப்படி நீதிபோதனை, யோகா போன்ற வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளில் நடத்துவதில்லை. இதை கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தற்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு கல்வியைவிட ஒழுக்கம்தான் அதிக அளவில் தேவை. எனவே, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை முறைப்படி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனைக்கு வகுப்புக்கு என தனியாக ஆசிரியர் நியமித்து வாரம் ஒரு வகுப்பு நடத்த கல்வியாண்டு தொடங்கத்திலேயே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் நீதிபோதனை, விளையாட்டு, இதர திறன் வளர்ப்புக்கு பயிற்சிகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், நீதிபோதனைக்கு என தனியாக மதிப்பெண்கள் கிடையாது என்பதால் இந்த வகுப்புகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால்தான் உறுதிசெய்ய முடியும் என்றனர்.
இதுகுறித்து, ஜக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியது:
மாணவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருந்தவரை அவர்களது ஒழுக்கமும் கட்டுக்குள் இருந்தது. தற்போது அந்த உரிமை ஆசிரியர்களுக்கு இல்லாததால் மாணவர்களை கண்காணிப்பது சவாலாக மாறிவிட்டது. மேலும், தேர்வு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகள் செயல் வடிவம் பெறுவதும் கேள்விக்குறியாகும்.
தவிர, இந்த நீதிபோதனை வகுப்புகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படுகிறது. அவர்கள் வாரந்தோறும் நீதிபோதனை நடத்தலாம் அல்லது நடத்தாமலும் போகலாம். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வகுப்புகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் மாதந்தோறும் எத்தனை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன என்பது குறித்து அறிக்கைகள் பெறப்பட வேண்டும். அவ்வாறு பெற்றாலே குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீதமாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்
No comments:
Post a Comment