ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ள மாநகராட்சி பள்ளிகளில் லேப்டாப் வசதியுடன் டிஜிட்டல் வகுப்பறைகள் புதிய கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பிடித்துள்ள மாநகராட்சிகளில் லேப்டாப் வசதியுடன் டிஜிட்டல் வகுப்பறைகளுடன் பள்ளிகளை புதிய கட்டமைப்புகளுடன் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று உயர்கல்வி கற்கவும், போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.அதற்கேற்ப பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் தனித்தனி அலகுகளாக பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதாக கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும், கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாடங்களை திரைவடிவில் செயல்முறை விளக்கத்துடன் எளிய முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படிக்கும் வசதி, அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பிடித்துள்ள மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறைகளை டிஜிட்டல் வகுப்பறைகளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரின் கட்டமைப்பு, தகவல் தொலைத்தொடர்பு, சாலை பாதுகாப்பு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.பாடங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் திரைவடிவில் செயல்முறை விளக்கமாக கற்பிக்கப்படும். மேலும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப லேப்டாப்கள் வழங்கப்பட்டு அதன் மூலமாகவும் கல்வி கற்க வசதிகள் செய்யப்படும்.கணினிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வகுப்பறைகளில் தனித்தனி மேஜை, இருக்கை, நவீன திரை, குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும். மேலும், பள்ளியின் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க நிழல்தரும் மரங்கள் வளர்க்கப்படும். மாநகராட்சி அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.
No comments:
Post a Comment