அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகச் செலவுக்கு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த, 'சமக்ர சிக் ஷா' திட்டத்தில், நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியில், பள்ளிகளின் ஆய்வகங்களுக்கு, ஒரே ஒரு தனியார் நிறுவனம் வாயிலாக, ஆய்வக உபயோகப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
நிதி வசூல் :
இந்த பொருட்களை, மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பொருட்களை எடுத்து விட்டு, மாணவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வர, தனியார் நிறுவனத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பொருட்களை மாற்ற முடியாது என, தனியார் நிறுவனத்தினர் மறுத்து விட்டனர். அதேநேரத்தில், ஒவ்வொரு பள்ளியிலும், தலா, 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டாயப்படுத்தி, நிதி வசூல் செய்யப்பட்டுஉள்ளது. இதற்கு, மாவட்ட சமக்ர சிக் ஷா அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர்.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களின் செய்முறை பயிற்சிக்கு பயன்படாத பொருட்களை, பள்ளி ஆய்வகங்களுக்கு, தனியார் நிறுவனம் வினியோகித்துள்ளது. செய்முறை தேர்வுக்கு என்ன தேவை எனத் தெரியாமல், அந்த நிறுவனம் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பொருட்களை வினியோகம் செய்கிறது. இதற்கு, சமக்ர சிக் ஷா அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
நீட் தேர்வு, ஜே.இ.இ., போன்ற, போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய நிலையில், அரசு பள்ளிகளில் ஆய்வகப் பொருட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் :
எனவே, இந்த ஆண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்த முடியுமா என்ற, சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமை ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment