“தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாறுகிறது. இதற்கான அரசாணை 2 வாரத்தில் வெளியிடப்படும்” என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் 2 வாரத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. குறிப்பாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழியில் உள்ள பெயர்கள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில் சுமார் 3 ஆயிரம் பெயர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மாபா.பாண்டியராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
பிற மொழிகளில் உள்ள பெயர்களை மாற்ற உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் முயற்சி செய்து வருகிறார். இன்னும் அநேகமாக இரு வாரங்களில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பெயர்களுக்கு மேல் திருத்தம் செய்யப்படும். வருவாய் துறை ஒருபக்கம், செய்தித்துறை ஒரு பக்கம், தமிழ் வளர்ச்சித்துறை ஒரு பக்கம் என்று 3 துறையும் இணைந்து இதில் செயல்பட்டு வருகிறது.ஊர்களுக்கு பெயர்களை வைப்பது, மாற்றுவதற்கான முழு அதிகாரம் படைத்த அமைப்பு வருவாய்த்துறைதான். அதன்படி கலெக்டர் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி அந்த பெயர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார்கள். அதற்கான அரசாணை வெகு விரைவில் அறிவிக்கப்படும். அப்போது ‘‘டிரிப்ளிகேன்’’ என்பது திருவல்லிக்கேணியாகவும், டூட்டிகாரின் என்பது தூத்துக்குடியாகவும் மாறும். இது போல பல பெயர்கள் உருமாறும். அதாவது 3 ஆயிரம் பெயர்கள் உருமாறும்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment