சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2009-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னதாக பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருந்து வருவதே இந்த போராட்டத்திற்கு காரணம்.
ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந்தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியைகள், கைக் குழந்தைகள் மற்றும் தங்கள் கணவர்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொட்டும் பனியையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 6-வது நாளாக இரவு- பகலாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் பலர் உடல் நிலையில் சோர்வுற்றனர். ஆரம்பத்தில் இருந்து தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து வந்ததால் 200-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment