மத்திய அரசை கண்டித்து வரும் ஜன. 8 மற்றும் 9ம் தேதிகளில் தேசிய அளவில் நடக்கும் பொது வேலைநிறுத்தத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து ஊழியர் சங்கங்களின் மதுரை மாவட்ட போராட்டக் குழு கூட்டம் மதுரையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் செல்வம், மாவட்டச் செயலாளர் நீதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ``புதிய ஓய்வூதிய திட்டத்தை அந்தந்த மாவட்டத்தில் முன்தேதியிட்டு வரையறை செய்ய வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காலிப்பணியிடத்தில் நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ₹18 ஆயிரமாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹3 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக போடப்பட்டது.
பின்பு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த நாலரை ஆண்டாக அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படையச் செய்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம். அனைவருடைய வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றனர். எதையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர்களுக்கு விரோதமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மத்திய அரசு மாற்றி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு போல் மாநில அரசும் இதுபோன்ற சட்டததை நிறைவேற்றுகிறது. மத்திய அரசின் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டித்து தேசிய அளவில், வரும் ஜன. 8 மற்றும் 9ம் தேதிகளில் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் உள்ள 84 அரசுத்துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றார்.
No comments:
Post a Comment