“நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்!
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்போம் !
இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டம் கடந்த 5 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர், 40,000/- ரூபாய் அல்லது 50,000 சம்பாதிக்கிற ஆசிரியர்கள் ஏன் போராடணும்? கொழுப்பெடுத்து உண்ணா விரதம் இருக்காங்க-என்று நினைக்கிறார்கள். அதனாலேயே இந்த போராட்டத்தையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.
உண்மை நிலை என்ன ?
2009-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்குப்பின் சேர்ந்த ஆசிரியர்கள் அடிப்படை ஊதியமாக வெறும் ரூபாய் 5,200 மட்டுமே பெறுகின்றனர். 10 ஆண்டுகளாக வேலை செய்யும் ஆசிரியர்களே இப்போதுதான் 23,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதற்கும் குறைவான வருடங்கள் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், இதைவிடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். இவர்களின் ஊதியம் மத்திய அரசு துப்புரவு தொழிலாளிகளின் ஊதியத்துக்கு இணையானது மட்டுமே.
ஏன் இந்த நிலை ?
ஒரே வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே சம்பளம் தராமல், 2009-க்கு முன், 2009-க்குப் பின் என பிரிப்பதற்கு என்ன காரணம்?
2009-இல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியை 10-ஆம் வகுப்பு என கெசட்டில் வெளியிட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 8,370-லிருந்து, 5,200 ஆக குறைக்கப்பட்டதுதான் பிரச்சினைக்கு காரணம்.
ஆனால், இந்த ஆசிரியர்களின் தகுதியோ, MA/MSC, B.Ed/ M.Ed வரை படித்துள்ளனர். மிகுந்த சிரமப்பட்டு TET தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியமும் கிடையாது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைக்கு இணையாகத் தான் இவர்களும் உள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள மாவட்டங்களில்தான் வேலை பார்க்கின்றனர். செலவுகளை குறைக்க, குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டுவிட்டு, வேலை பார்க்கும் இடத்தில் வீடெடுத்து தங்கி, சமைத்து சாப்பிட்டு வேலைக்கு சென்று வருகின்றனர்.
ஊருக்கு சென்றால், 2,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால், மாதம் ஒரு முறை அல்லது 2 – 3 மாதங்களுக்கொரு முறைதான் வீட்டிற்கு செல்கின்றனர்.
சில ஆசிரியர்கள் வேலை செய்யும் ஊருக்கு போக்குவரத்து வசதி அதிகம் இல்லாதிருப்பதால், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதற்கு பெட்ரோல் செலவே மாதம் 3,000 ரூபாய் வரை ஆகிறது.
போராட்ட கோரிக்கைகலைத் திரித்து தினகரன் நாளிதழில் வந்த செய்தி.
“பள்ளியில் கடன் வாங்கியதற்காக மாதம் 4,000 ரூபாய் வரை பிடித்தம் செய்துவிட்டு 17,000 ரூபாய்தான் கையில் வாங்குகிறோம். ஏறுகிற விலைவாசியில் இதைக் கொண்டு எப்படி வாழ்வது? குடும்ப செலவுகள், மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் கந்துவட்டிக்கும்கூட கடன் வாங்குகின்றனர்.” என்று உண்மை நிலவரத்தை எடுத்துரைக்கிறார்கள் ஆசிரியர்கள்.
இவர்கள் கேட்பது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் அல்ல; ஊதிய உயர்வும் அல்ல; நிலுவைத் தொகையும் அல்ல “சக ஊழியருக்கு இணையான, சம வேலைக்கு சம ஊதிய உரிமை மட்டுமே!!” ஆனால், இதைக் கூட பத்திரிக்கைகள் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.
போராட்ட சூழல்
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற, குப்பைகளும், சாம்பலும் நிறைந்த இடம்தான் போராடும் இடம். அதை இவர்களே சுத்தம் செய்து அமர்ந்திருக்கின்றனர். பூரான், தேள், நட்டுவாக்கிளிகளால் கடிபட்டுக் கொண்டு, பாம்புகளின் நடமாட்டத்தினூடே, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடுகின்றனர்.
4 நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் அருந்தாமல் நடந்த போராட்டத்தில், வயிற்று வலி, வயிற்றுக்கு பின்புறம் ஏற்படும் வலி தாளமுடியாமல் நேற்றிலிருந்து (27.12.2018) தண்ணீர் மட்டும் குடித்து வருகின்றனர். 5 நிமிடங்களுக்கு ஒருவர் மயக்கமடைந்து விழுகிறார். மயக்கமடைபவர்களின் அருகில் இருப்பவர்கள் கைதட்டி மருத்துவ உதவியைக் கேட்கின்றனர். 108-லிருந்து வந்துள்ள மருத்துவ பயிற்சியாளர்கள் முதலுதவி செய்து, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மகிழ்ச்சியின் குறியீடான “கைதட்டல்” இங்கே மயக்கத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.
கர்ப்பிணிப்பெண்கள், கைக்குழந்தைகள், குழந்தைகளுடன் பெண் ஆசிரியர்களும், பால் பேதமின்றி கொட்டும் பனியிலும், அடிக்கும் வெயிலிலும் திறந்த வெளியில் பாதி மயக்க நிலையில் கிடக்கின்றனர். பகல் வேளையில் ஊடகங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகையால் உற்சாகமூட்டப்படும் இவர்கள், இரவில் மனவேதனையுடன் கண்ணீர் சிந்துகின்றனர்.
சிறுநீரகத் தொற்றாலும், பசி மயக்கம், மன உளைச்சலும் உள்ள ஆசிரியர்கள் சொல்வது, “நாங்கள் சொகுசு வாழ்க்கைக்கான சம்பளத்தைக் கேட்கவில்லை; வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான சம்பளத்தைத் தான் கேட்கிறோம்.” இவ்வளவு சிரமப்படுவது வறுமையிலிருந்து மீள்வதற்கு என்பதைத்தான் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பணிச் சூழல்
மூலைக்கு மூலை பள்ளிகளைத் திறந்து, தனியாரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் கல்வித் துறையில், தனியார் மோகம் மக்களிடம் கவிழ்ந்திருக்கும் சமூக சூழலில் அரசுப் பள்ளிக்கு வருவது யார்?
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சூழல் உள்ள மாணவர்கள்தாம். டாஸ்மாக்கால் குடிநோயாளியாகிப்போன தந்தை அல்லது தாய் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள், குடும்பச் சூழல் சிதைவுற்று தாத்தா- பாட்டியிடம் வளரும் குழந்தைகள், பெற்றோர் கண்காணித்து வளர்க்கும் குடும்ப சூழல் இல்லாத மாணவர்களுக்குதாம் இவர்கள் அறிவூட்டுகின்றனர்.
400-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு 100% தேர்ச்சி பெறும் மாணவர்கள் மத்தியில், அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகித்ததை அதிகரிக்க செய்வது இந்த ஆசிரியர்களின் முயற்சியும், உழைப்பும்தான்.
பசியுடன் வரும் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவது, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களைக் கூட சில ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் வாங்கித் தருகின்றனர். அரசுப்பள்ளிகளை ஒழித்துக் கட்டி, தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கும் இந்த அரசு, பள்ளிகளுக்கு போதுமான நிதி ஒதுக்காமல் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் நிதி தருகிறது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களிடம் நன்கொடை வாங்கிதான் பள்ளியின் இதர நிர்வாக செலவுகளை நடத்துகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இல்லையென்றால், அரசுப்பள்ளிகளே இல்லை என்பதுதான் உண்மை.
இவர்களால்தான் இப்பள்ளிகள் இயங்குகின்றன. ஆசிரியர்களின் முயற்சி இல்லையென்றால் எல்லா அரசுப் பள்ளிகளும் எப்போதோ பூட்டப்பட்டிருக்கும்.
அந்த வகையில், இப்போராட்டம் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்!
ஆசிரியர்கள் கூறுவது என்ன ?
ஆறு ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர் செந்தில்ராஜன் (பல்லடம்) கூறுவதாவது; “ஒரு டீச்சரா நா டிப்டாப்பா போகனும்… இந்த சம்பளத்துல நாங்க சொங்கி மாதிரி போய் உக்கார வேண்டியிருக்கு. பசங்க எப்டி எங்கள மதிப்பாங்க? நாங்களும் இதே போஸ்டிங்குக்கு எக்ஸாம் எழுதி தான வர்றோம். நெறைய பேரு நாங்க வெளியூருல தங்கி வேல செய்யுறோம். இதனால எங்களுக்கு ரெண்டு வீட்டுக்கு வாடக செலவு வருது.
எங்க உடம்ப வருத்திக்கிட்டு தான் நாங்க இந்த போராட்டத்த பண்றோம். கொழந்தைங்க எங்களோட பசியில இருக்காங்க. அவங்களுக்கு மறச்சு மறச்சு சோறு ஊட்டவேண்டிதாயிருக்கு. இதை வச்சிகூட மீடியா எங்க போராட்டத்த கொச்சப்படுத்தீருமோ என்னமோன்னு பயமா இருக்கு. இந்த போராட்டத்துல எங்க உடல்வலி மரத்துப்போயிருச்சு, ஆனா எங்களுக்கு வேற வழியில்ல.
நான் இந்த கல்வி சிஸ்டத்தையே மாத்தணும்னு தா.. இந்த டீச்சர் வேலைக்கு வந்தேன். இதுக்கு முன்னாடி நா.. டையிங் கம்பனில மாசம் 35,000 சம்பளத்துல இருந்தேன். அத விட்டுட்டு இப்டி வந்து உக்காந்துருக்கேன். எங்க போரட்டத்துல ஒருத்தர் செத்தாதான் பெரிய பிரச்சனையா மாரும்னா அதுக்கு நாங்க தயார். அடுத்த தலைமுறையாவது நல்லபடியா வாழனும்.”
மற்றொரு ஆசிரியை, “ பத்து வருஷமா இந்த பிரச்சன இருக்கு, இப்போ நாங்க அத போய் கேட்டா, என்ன பிரச்சனனு திரும்ப எங்ககிட்டையே கேட்டா எவ்ளோ கடுப்பா இருக்கும்? ‘என்னா கையபுடிச்சி இழுத்தயா’-ன்ற கதையா இருக்கு. இவங்க குடுக்குற சம்பளத்துல எங்களையே பாத்துக்க முடில, நாங்களே சத்துணவு சாப்பாடுதான் சாப்புடுறோம். இத நாங்க கேவலமா சொல்லல எங்க நெலம அவ்ளோ மோசமா இருக்கு. எங்க போராட்டத்துக்கு யார் வந்தாலும் சந்தோசம். வராட்டி நாங்களே தான் நடத்தனும். வலி எங்களுக்கு தானே.. ” என்றார்.
இன்னொருவரோ, “எங்கள் சொந்தக்காரங்க எல்லாம் நாங்க ஏதோ நெறய சம்பாதிக்கிற மாதிரி நினைக்கிறாங்க. அவங்ககிட்ட அவசரத்துக்கு கடன் கேட்டாக் கூட நம்பமாட்றாங்க. உண்மைய சொல்லணும்னா, உடம்பு சரியில்லன பக்கத்துல இருக்க ஜி.எச்-சுக்குத்தான் போறோம். இதை வெளியில சொன்னா யாரும் நம்பமாட்றாங்க. நீங்களாவது இதை வெளியில சொல்லுங்க” என்றார்.
எங்களோட சேர்ந்து வேலை பார்க்கும் ஆசிரியர்களே எங்களை ஒண்ணா நினைக்காம, 2009-க்குப் பின் வந்தவங்கனு நெனைக்கிறது கஷ்டமாக இருக்கு. ஆசிரியர்கள் அனைவரும் இதில் ஒன்றுபட்டு நின்றால் எளிதில் தீர்வு கிடைக்கும் என்கின்றனர் போராடும் ஆசிரியர்கள்
அரசுக்கு, “நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர்.
ஆசிரியர்களின் அப்பாவித்தனமான கோரிக்கையைக் கேட்டு அரசு கள்ளச் சிரிப்பு சிரிக்கலாம். ஸ்டெர்லைட்டில் 14 பேரைக் கொன்ற இந்த இரக்கமற்ற அரசு கொக்கரித்தும் சிரிக்கலாம். ஆனால், நாம் மவுனம் காக்கலாமா?
சமூகத்திற்கான சேவையைப் போல், ஏழை மாணவர்களை வடிவமைக்கும் சிற்பிகள், அனிதாக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் செத்துக் கொண்டிருப்பதை கண்முன் கண்டுகொண்டு கைகட்டி நிற்கலாமா?
No comments:
Post a Comment