ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி தமிழக அரசுடன் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கிடையிலான ஊதிய வேறுபாட்டை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி, பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமானோர் சென்னை வந்தனர். அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து அடுத்தக்கட்ட போராட்டத்தை திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக முதல்வரை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வாக்குறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை குரோம்பேட்டை, தாம்பரம், மடிப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் ஆசிரியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோருடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை புறநகர் பகுதிகளில் தங்கியிருந்த இடை நிலை ஆசிரியர்கள் மின்சார ரயில் மூலமாக புறப்பட்டு நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தின் முன்பு குவிந்தனர்.
போராட்ட அறிவிப்பை முன்கூட்டியே அறிந்திருந்ததால் டிபிஐ வளாகத்தின் அனைத்து கதவுகளையும் போலீஸார் அடைத்திருந்தனர். மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நூற்றுக் கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment