வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தோரின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் திணறி வருகின்றனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறையின் வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான துறைகளின் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியே, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசின் வழியாக, தனியார் வேலை வாய்ப்புக்கும், இந்த பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புகளுக்கு, பதிவு மூப்பு முக்கிய தேவையாக உள்ளது.தற்போது, வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மயமாகியுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் போன்றவற்றில், நேரடியாக புதுப்பித்தல் மற்றும் பதிவு பணிகள் நடப்பதில்லை. பட்டதாரிகள், தங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தலை, ஆன்லைனில் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
தற்போது, 2011 முதல் புதுப்பிக்க விடுபட்டோருக்கு, ஜன., 24க்குள், பழைய பதிவு மூப்பின்படி புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளால், ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை. பலரது பதிவு விபரங்கள், ஆன்லைனில் இருந்து மாயமாகியுள்ளதே இதற்கு காரணம்.மாயமான பதிவு விபரங்களின் நிலை என்னவென, வேலை வாய்ப்பு துறைக்கு தெரியவில்லை. பல மாவட்ட அலுவலகங்களில், பதிவு எண் விபரங்களை, டிஜிட்டலில் சேர்த்த போது, பலரது விபரங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, விடுபட்டோரின் விபரங்களை, மீண்டும் பதிவேற்றாவிட்டால், அவர்களின் பதிவு மூப்பு, பாதிக்கப்படும் அபாயம் உள்ளது
No comments:
Post a Comment