"நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், பூபதி. 13 லட்சம் வரை ஸ்பான்ஸர் பிடித்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கிறார்.
இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவரின் நண்பரானவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்துள்ள மருதவனம் கிராமத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அமுதா. சமீபத்தில் இந்தப் பகுதியை கஜா புயல் சிதைத்துப்போட, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்திருக்கிறார் பூபதி.
அமுதாவிடம் பேசி, 'புயலால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என்னால் உதவ முடியாது. யாராவது முதியவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள், அவருக்கு நிரந்தரமாக உதவுவோம்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, ஆசிரியை அமுதா மருதவனத்தில் தான் பெற்ற ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனித்து வாழ்ந்த பாக்கியம் பாட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
அவர் வசித்துவந்த ஒட்டுக் குடிசையையும் பழைய பாத்திரங்களையும், பழைய நைய்ந்த சேலைகளையும் கஜா புயல் சிதைத்துப் போட, பக்கத்து வீட்டில் தற்காலிகமாக வசித்துவந்திருக்கிறார். அவரது கதையைக் கேட்டு இதயம் கசிந்த பூபதியும், அவரது ஆசிரியை மனைவியான பிருந்தாவும், மளிகை சாமான்கள், 50 புடவைகள், சமையல் செய்யப் பயன்படுத்தும் சாமான்கள் சகிதமாகப் போய் இறங்கி இருக்கிறார். பாக்கியம் பாட்டி கையைப் பிடித்து,'என்னை மகனா நினைத்துக்கொண்டு இத வச்சிக்க.' என்று சொல்ல, கரகரவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
'கொள்ளு விரையாட்டம் அஞ்சு பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, ஆளானதும் என்னை அம்போன்னு தவிக்கவிட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. என்னை சீந்தக்கூட நாதியில்லை. மாட்டுக்கொட்டகையைவிட கேவலமான குடிசையில் உசுரக் கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கேன். 75 வயசாயிட்டு.
முன்னமாதிரி பொழப்புதழப்புக்கும் போக முடியலை. அரசாங்கம் தர்ற 1000 ரூபா முதியோர் உதவித்தொகையில சீவனம் நடந்துச்சு. இலவச ரேஷன் அரிசி வாங்கி திங்கக்கூட வழியில்லாம ரேஷன் கார்டைகூட பாவி புள்ளைங்க தூக்கிட்டுப் போயிட்டுங்க. இந்த நிலையில புயல் வந்து, என்னோட வீட்டையும், சாமான்களையும் சேதம் பண்ணிட்டு. வாழ்க்கையே இருண்டுகிடக்கு தம்பி' என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார்.
அதைக் கேட்டு கண் கலங்கிய பூபதி, "உன்னை என் தாயா தத்தெடுத்துட்டேன். உன் கடைசி காலம் வரைக்கும் நான்தான் உனக்குப் புள்ள. குடிசைபோட எவ்வளவு செலவாகும்' என்று கேட்டிருக்கிறார். 'ஐயாயிரம் வரை செலவாகும்' என்று சொல்லியிருக்கிறார். 'அதை அமைச்சுத் தர்றேன்' என்றதோடு, கையில் இரண்டாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, "உன் கடைசி காலம் வரை உனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புகிறேன்" என்று சொல்ல, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வராமல் பாக்கியம் பாட்டி நா தழுதழுத்திருக்கிறார்.
பூபதியிடமே பேசினோம். "அந்த அம்மாவின் கதையைக் கேட்டதும் மனசு நொறுங்கிப் போயிடுச்சு. கஜா புயலில் மருதவனம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா, தனது அம்மா கதி என்னன்னு ஒரு பிள்ளையும் வந்து அவரை பார்க்கலை. அது புயல் செய்த கொடுமையைவிட அவலம். அதனால், நானும் என் மனைவியும் அந்த மூதாட்டியைத் தாயாகத் தத்தெடுப்பதுனு முடிவுபண்ணி மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புறதா சொல்லியிருக்கிறோம்.
அதோட, மாசம் ஒரு தடவை போய் அவரைப் பார்த்து, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்றதா இருக்கோம். அவருக்குப் புயல் பாதித்த அல்லலைவிட, தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கலையேங்கிற மனக்குமுறல்தான் அதிகம். அந்தக் குறையை நானும் என் மனைவியும் ஆசிரியை அமுதா உதவியோடு போக்கியிருக்கிறோம்" என்றார் அழுத்தமாக
My dear teachers.... God bless you!
ReplyDeleteYou are great.
ReplyDelete