(S.Harinarayanan, GHSS Thachampet)
சிப்பிக்குள் முத்து-உருவாவது எப்படி?
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.
மன்னார் வளைகுடாவில் நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் அதிகம் இருப்பதால், அவற்றை உண்டு வாழும் முத்துச்சிப்பிகளும் (Pearl) இங்கு அதிகம். முத்தை உற்பத்தி செய்யும் பிங்டாடா ஃபியுகடா (Pinctada fucata) என்ற வகை முத்துச்சிப்பி இங்குள்ளது.
முத்துச் சிப்பிகள் தங்களது ஓட்டுக்குள் நேக்ரியஸ் என்ற மென்மையான அடுக்கைக் கொண்டுள்ளன. இந்த மெல்லுடலிகளின் உடலுக்குள் வேற்றுப் பொருள் செல்லும்போது ரத்தம் அல்லது சீழ் போலிருக்கும் நேக்ரி (Nacre) என்ற திரவத்தை, அந்த நேக்ரியஸ் அடுக்கு சுரக்கிறது. இந்தத் திரவம் அந்த வேற்றுப் பொருளைச் சூழ்ந்து, காலப்போக்கில் கடினமான முத்தாக மாறிவிடுகிறது.
கறுப்பு, வெளிர் சிவப்பு, தங்கம், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் முத்துகள் இருக்கும். வட்ட வடிவ முத்துகள் அதிக மதிப்புடையவை. எடை, நிறம், பளபளப்பைப் பொறுத்து முத்துகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முத்துச்சிப்பிப் பூச்சிகள் கடலில் இருந்து பிடித்து வளர்க்கப்பட்டு, செயற்கையாகவும் முத்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா, குஜராத்தில் கட்ச் வளைகுடா கடல்பகுதிகளில்தான் அதிகமான முத்துக்குளிப்பு நடந்து வந்தது.
கடலில் மூழ்கிச் சென்று முத்துச்சிப்பிகள் சேகரிப்பதையே முத்துக்குளித்தல் என்கிறார்கள். மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பாம்பன் முதல் மணப்பாடு வரை கடலில் 160 கி.மீ.தூரம் வரை 600 வகையான முத்துச்சிப்பி படுகைகள் இருந்தாலும் 6 வகைகள்தான் இப்போது இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை இவற்றின் வளர்ச்சிக் காலமாக இருப்பதால் அலைகள் குறைந்தும் கடல் தெளிந்தும் இருக்கும்போது முத்துக்குளிப்பு நடைபெறும். இக்காலங்களில்தான் குறைந்தபட்சம் 2 லட்சம் முத்துச்சிப்பிகள் வரை சேகரித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளிப்பின் மையமாக விளங்கியது தூத்துக்குடி. அதன் காரணமாக இந்த நகருக்கு முத்து நகர் என்ற பெயரும் வந்தது. கடலில் உள்ள முத்துச்சிப்பி படுகைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம் என்பதால் முத்துக்களின் வளமும், முத்துக் குளிப்பும் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 10-20 கி.மீ. தூரத்தில் 15-25 கி.மீ. ஆழம் வரை இலை வடிவத்தினாலான முத்துச்சிப்பிப் படுகைகள் தென்படும். கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், முத்துச்சிப்பிகள் அதில் ஒட்டி வளர பேருதவியாக இருக்கின்றன.
மன்னார் பகுதியில் சேறு அதிகம் இல்லாததால் கடல் நீர் கலங்கவோ, சிப்பிகளின் வளர்ச்சி குறையவோ வாய்ப்பில்லை. சிப்பிகளுக்குத் தேவையான இயற்கை தாவர நுண்ணுயிரிகள்,ஆக்சிஜன் ஆகியனவும் முத்துச்சிப்பி படுகைகள் வளமுடன் அமைவதற்கு ஏற்ற வாய்ப்பாகவும் உள்ளது.
சிப்பிக்குள் முத்து உருவாவதைப் பற்றி பல மூட நம்பிக்கை கதைகள் அதிகமாக அலைந்து கொண்டிருந்தாலும் உண்மையில் முத்து உருவாவது அதன் உட்கரு நுழைவதைப் பொறுத்தே அமையும். எல்லாச் சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. எந்தச் சிப்பியில் முத்து இருக்கும் எதில் இருக்காது என்பதையும் யாரும் அறிய முடிவதில்லை.
கடல் மாசுபடுதல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் இதன் வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முத்துச்சிப்பி படுகைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்துக் குளித்திட முடியும்
Thanks for the useful post Sir.
ReplyDeleteThanks for the useful post Sir.
ReplyDelete