பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து கேட்டுக்கொண்டார்.
திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய கற்பித்தல் முறை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து தொடங்கி வைத்துப் பேசியது:
பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப பார்வை அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய வருகைப் பதிவேடு முறையை எல்லா பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை பார்வை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். புதிய கற்பித்தல் முறை பள்ளிகளில் முறையாகப் பின்பற்றப்படுவதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரசாணை எண் 200-இன்படி செயல் வழிக்கற்றலில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய கற்பித்தல் முறையைப் பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். கையடக்க கணினியில் கியூ கோட்டை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றார்.
பயிற்சியில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் க. கலைவாணன், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் இரா. பாலசுப்ரமணியன் செய்திருந்தார்
No comments:
Post a Comment