எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்

Saturday, January 19, 2019




இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது:
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் வீதம் 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகத்தில் அறிவியல் திட்டம் தொடர்பாக ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், இஸ்ரோ ஆய்வகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களிலும் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும், அவர்களுக்கு சிறிய செயற்கைக் கோளை தயாரிப்பதற்கான நடைமுறை அனுபவத்தை அளிக்கவும் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு அறிவியலில் ஓர் ஈர்ப்பு ஏற்படும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக உருவாக வாய்ப்பு ஏற்படும். இதனால், இளம் விஞ்ஞானிகள் திட்டம் முக்கியமானதாகும்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதுபோன்று மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் இஸ்ரோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இந்தியாவில் இளம் விஞ்ஞானிகள் நல்ல முறையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மாணவர்களிடம் அளப்பரிய ஆர்வமும், ஆற்றலும் குவிந்து கிடக்கிறது. அதை நல்லதொரு பணிக்காகப் பயன்படுத்தலாம். மாணவர்கள்தான் நாளைய இந்தியா. அவர்களை சிறந்த வகையில் உருவாக்கும் பொருட்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை என்றார்.
திருச்சியில் மையம்
மாணவர்கள் விண்வெளி ஆய்வு மேற்கொள்ள திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தில்  ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இஸ்ரோ இல்லாத பிற இடங்களில் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் ஆய்வு தொடர்பான விஷயங்களுக்கு உதவும் வகையில், அவுட்ரீச் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக இந்தத் திட்டத்தின்படி, ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
திரிபுராவில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்திலும், ஜலந்தரிலும் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, நாக்பூர், இந்தூர், ரூர்கேலா ஆகிய இடங்களிலும் இந்த மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை தயாரிக்கும்பட்சத்தில், அதை இலவசமாக விண்ணில் செலுத்துவதற்குரிய உதவியை இஸ்ரோ செய்துதர உள்ளது. இது மாணவர்களுக்கு நல்லதொரு ஊக்கமாக அமையும் என்றார் கே.சிவன்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One