செய்யாறில் நெகிழிக் பொருள்களைத் தவிர்க்கக் கோரி, 2-ஆம் வகுப்புப் பயிலும் மாணவி பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
செய்யாறு திருவோத்தூர் ஆற்றங்கரைத் தெருவில் வசிப்பவர் நெசவுத் தொழிலாளி எஸ்.யுவராஜ். இவரது மகள் ரூபிகா (7). இவர் அந்தப் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் 2 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கோமதி திருவத்திபுரம் நகராட்சியில் இரு வாரங்களாகப் பரப்புரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு பல்வேறு விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அறிந்த பரப்புரையாளர் கோமதி, அவற்றைத் தவிர்க்கக் கோரி, சொந்தமாகப் பாடலை எழுதி, அந்தப் பாடலை தனது மகள் ரூபிகாவுக்கு பாடக் கற்றுக் கொடுத்து பாட வைத்தாராம்.
இதையடுத்து, திருவத்திபுரம் நகராட்சியினர் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களைத் தவிர்க்கக் கோரி மாணவி ரூபிகா மூலம் திங்கள்கிழமை விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களுக்கு துண்டறிக்கையும் வழங்கினர்.
செய்யாறில் அங்காடித் தெரு, பேருந்து நிலையம், ஆரணி கூட்டுச் சாலை, அண்ணா சிலை, லோகநாதன் தெரு உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளில் மாணவி ரூபிகா பாட்டுப்பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டறிக்கைகளை விநியோகித்தார்.
மாணவி ரூபிகாவுக்கு உறுதுணையாக திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லிபாபு, துப்புரவு ஆய்வாளர் மதனராசன், சமுதாய அமைப்பாளர் அம்பேத்கர் சுந்தரம், பரப்புரையாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் குழுவாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment