கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ. 1500 வீதம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதலை யுஜிசி திங்கள்கிழமை வெளியிட்டது. இதை அனைத்து மாநில உயர்கல்விச் செயலாளர்களுக்கும், அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ள யுஜிசி, இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் உயர்த்தப்பட்டிருக்கும் இந்த புதிய மதிப்பூதியத்துக்கு, தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி-யின் 537 ஆவது குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கான மதிப்பூதியம் ரூ. 1500 ஆக உயர்த்தப்படுவதாகவும், அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை மதிப்பூதியம் உயர்த்தப்படுகிறது. கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றபோதும், பல்கலைக்கழகங்களில் மட்டும் ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் அதிபட்சம் 20 சதவீத இடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.
யுஜிசி-யின் உதவிப் பேராசிரியர் நியமன வழிகாட்டுதலின்படியே கௌரவ விரிவுரையாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, உதவிப் பேராசிரியருக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களையே தேர்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment