கன்னியாகுமரி மாவட்டத்தில், தன்னார்வலரும், மகேந்திரகிரி ISRO Propulsion Complex-இல் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான முள்ளஞ்சேரி எம். வேலையன் வழிகாட்டுதலில் இயங்கிவருகிறது குமரி அறிவியல் பேரவை. இந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து அறிவும், ஆர்வமும் மிக்க 8 -ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்து இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி வருகிறது.
அவ்வாறு நிகழாண்டு விருப்பம் தெரிவித்த 450 மாணவர்களில் 54 பேர் தேர்வாகி பயிற்சி பெற்றுவருகின்றனர். பல்வேறு பள்ளிகள், கலை, அறிவியல், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், நீரோடி முதல் வட்டக் கோட்டை வரையிலான கடலோர ஆய்வுப் பயணம், மகேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex பயணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்தப் பயணங்களின் மகுடமாக அமைந்துள்ளது இவர்கள் கடந்த ஜனவரி 4, 5 -ஆம் தேதிகளில் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ISRO-வின் செயற்கைக் கோள் செலுத்து தளமான சதீஷ் தவண் விண்வெளி மையத்துக்கு (SDSC) மேற்கொண்ட பயணம்.
இந்த பயணம் குறித்து இளம் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற மாணவி காவியா அனூப் கூறுகையில்,
"சதீஷ் தவண் விண்வெளி மையத்துக்குள் எவரும் எளிதில் நுழைந்துவிட முடியாத நிலையில், மாணவர்கள் என்ற முறையில் எங்களுக்கு சிறப்புரிமை கிடைத்தது. முதலில் பிரதான ராக்கெட் கட்டுப்பாட்டு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட எங்களுக்கு, அங்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் குறித்து வீடியோ மூலம் விளக்கப்பட்டது. பிறகு, பிரதான ராக்கெட் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளின் இருக்கைகளில் அமர்ந்து அங்குள்ள கணினி மற்றும் கருவிகளை பார்த்து ரசித்தோம். தொடர்ந்து, ராக்கெட் ஏவுதள கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்ற நாங்கள், அங்கிருந்த PSLV, GSLV, GSLV Mk-III ஆகியவற்றின் மாதிரிகளைப் பார்வையிட்டோம்.
அதோடு, ஏவுதளம் அருகேயுள்ள ராக்கெட் செலுத்து கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டதோடு, அங்குள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களையும், கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் ராக்கெட் ஒருங்கிணைப்பு தளத்தையும் கண்டு ரசித்தோம். பிறகு, அங்குள்ள Sounding Rockets ஏவுமிடத்தைப் பார்வையிட்ட போது, எங்களால் நம்பமுடியாத அளவில், நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறியதாக அது இருந்தது.
ஏவுதளம் அருகே 500 மீட்டர் தொலைவில் ராக்கெட்டின் பாகங்களை ஒன்றிணைக்கும் இடம் உள்ளது. இங்கு ஒருங்கிணைக்கப்படும் ராக்கெட், நகரும் கோபுரங்கள் மூலம் ஏவுமிடத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதேபோன்று, கோபுரங்களை தனியாக நகர்த்தாமல் ரயில் மூலம் ஏவுதளத்துக்கு கொண்டுவரும் மற்றொரு முறையும் உள்ளது. ராக்கெட் புறப்படும் போது, வெளிவரும் தீப்பிழம்புகள் ராக்கெட்டின் பின்பக்கத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் தடுக்கும் Jet Deflector Duct என்ற நுட்பம் பயன்படுத்தப்படுவதை அறிந்து வியப்படைந்தோம்'' என்கிறார்.
இதுகுறித்து மற்றொரு இளம் விஞ்ஞானி மாணவி சிவச்சந்தினி கூறுகையில், "ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்னால், 6 முதல் 8 நாள்கள் வரை திறந்தவெளியில் இருப்பதால், மின்னல் தாக்கி சேதமடையும் வாய்ப்பு உள்ளது. அதைத் தடுக்க Lightening Protection Tower அமைக்கப்பட்டுள்ளது. ஏவுதளத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளம் ராக்கெட் புறப்படும்போது உருவாகும் தீப்பிழம்புகள் மீண்டும் ராக்கெட் மேல் படாமல் வெளியேற வகை செய்கிறது. அதன் அருகே 110 மீட்டர் உயரம் கொண்ட தொட்டியிலிருந்து இந்த தீப்பிழம்புகள் மீது ஊற்றப்படும் தண்ணீரால், ராக்கெட் கிளம்பும்போது ஏற்படும் வெடிச்சப்தம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்தோம்.
நம் இந்தியர்கள் ஏர்பிரித் ராக்கெட் மற்றும் மேன்மிஷன் ராக்கெட்டை பரிசோதித்து வெற்றிகண்ட சவுண்டிங் ராக்கெட் ஏவுதளத்தையும் பார்த்தோம். பெரிய ராக்கெட்டை அனுப்பி மக்கள் பயன்பாட்டுக்கான துணைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கு முன்னால், சவுண்டிங் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிறிய ராக்கெட்டுகள் ஏவப்பட்டு ஆய்வுசெய்யப்படுவது வழக்கம் என்பதையும் முதன்முறையாக அறிந்து வியந்தோம்'' என்கிறார்.
இதுகுறித்து குமரி அறிவியல் பேரவையின் பயிற்சியாளரும், வழிகாட்டி ஆசிரியர்களில் ஒருவருமான தீபா கூறுகையில், "ராக்கெட் கட்டுப்பாட்டு அமைப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குருராஜன், சதானந்தன், சந்திரசேகரன், ராம்பிரசாத் ஆகியோர் விளக்கம் அளித்த முறையும், அவர்களது பணிவும் எங்களை வியப்படையச் செய்தது. ராக்கெட்டை ஏவும் கவுண்டவுன் தொடங்கும் முன்பு புரொப்லன்ட் (உந்துவிசைக்கான எரிபொருள்) நிரப்பப்படும். இந்த நேரத்தில் 5 கி.மீ. தொலைவில் யாரும் இருக்கமாட்டார்களாம். இதன் அருகே இடிதாங்கி கோபுரமும், ஒலியின் அளவை குறைக்க அட்லாண்டிக் ஸ்டெர்ஸ்ங் சிஸ்டமும் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
மற்றொரு வழிகாட்டி ஆசிரியை சந்தியா கூறுகையில், "ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏவப்படவுள்ள ராக்கெட்டுகளை மாணவர்கள் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது'' என்றார்.
மாணவி காவியா அனூப் தொடர்ந்து கூறுகையில், "விண்வெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பிறகு, சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இயக்குநர் எஸ். பாண்டியன் மற்றும் 5 விஞ்ஞானிகளோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. குமரி அறிவியல் பேரவையின் நிகழாண்டு ஆய்வு தலைப்பான விண்வெளி ஆய்வில் நிலமும், வாழ்வும் (Land and Life Through Space Research) என்ற தலைப்பில், ஐந்திணை நிலங்களுக்கும் செயற்கைக் கோள்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இயக்குநர் பாண்டியன் அருமையாக விளக்கினார். அவர் அளித்த விளக்கமும், சதீஷ் தவண் விண்வெளி மையமும் இன்னும் கண்களிலேயே நிற்கிறது'' என்கிறார் காவியா.
- இரா. மகாதேவன்
No comments:
Post a Comment