ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:புதிதாக துவங்க உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சங்கங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதைவிட, ஆங்கில வழி கல்விக்கு மாற்றும் போது, ஆசிரியர்கள் அதே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் மனிதநேயத்தோடு பணியாற்ற வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக கூறினர். தற்போது பொதுத்தேர்வு நேரம் என்பதால் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
அதே நேரத்தில், ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். அதை புரிந்து கொண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment