போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வதும், கைது செய்வதும் பிரச்னைக்குத் தீர்வாகாது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. அத்தகைய கடமையை அரசு செய்யத் தவறியதால், தங்களுக்கு வேறு வழியின்றி கடைசி ஆயுதமான வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அரசின் அனைத்து துறைகளும் செயல்படாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, தேர்வு நேரம் என்பதால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பணியிடை நீக்கம் செய்வது, கைது செய்து சிறையில் அடைப்பது, ஊதியம் பிடித்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் போராட்டத்தை மேலும் தீவிரமடைய வழிவகுக்குமே தவிர, தீர்வாகாது. எனவே, தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு , போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment