அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நீடித்தது. பல இடங்களில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிகளில் குடியரசு தின முன்னேற்பாடுகள், கலை நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப்பட்டது பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை நீடித்தது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பொருட்படுத்தாமல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை... சென்னையில் எழிலகம் அருகில் ஆயிரத்துக்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை காலை திரண்டனர். அப்போது, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன், இரா.தாஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல் காலம் கடத்தி வந்தது அரசின் தவறு. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசுதான் பொறுப்பு. தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி இந்த பாதிப்பை ஈடுசெய்ய எங்களால் முடியும். அரசின் தவறான முடிவால்தான் இந்த பிரச்னை. அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். எந்த நிலையிலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றனர்.
மெரீனாவில் மறியல்: இதையடுத்து ஒருங்கிணைப்பாளர்கள் மறியலில் ஈடுபடுவதற்காக காமராஜர் சாலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை சாலை பகுதிக்கு விடாமல் போலீஸார் தடுப்பு வேலி அமைத்தும், கயிறு கட்டியும் வைத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி தடுப்பு வேலிமேல் குதித்து மெரீனா சாலையில் அமர்ந்தனர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல் துறையின் வாகனங்களில் ஏற்றினர்.
களையிழந்த குடியரசு தின நிகழ்ச்சிகள்: நான்காவது நாளாக அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்களில் அன்றாடப் பணிகள் பெருமளவில் தேக்கமடைந்தன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் அதிகளவில் மூடப்பட்டிருந்தன.
குடியரசு தினம் சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை திறந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும். இந்தநாளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உண்டு. ஆனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படாததால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment