ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும்என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம்தமிழகத்தில் 2011-ல் தான் நடைமுறைக்கு வந்ததால், 2016-ம் ஆண்டு வரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின் அந்த காலக்கெடு 2019 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் 2 மாதங்களில் முடிய உள்ள நிலையில் இன்னும் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதனால் அவர்கள் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘கல்வி உரிமைச் சட்டப்படி ஆண்டுக்கு 2 முறை வீதம் 8 ஆண்டுகளில் 16 முறை தகுதித் தேர்வு நடத்தியிருக்க வேண்டும். விதிமுறைப்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 16 முறை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 4 முறைதான் டெட் தேர்வு நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்களால் டெட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. கடைசியாக 2017-ம் ஆண்டு தேர்வு நடந்தது. அதன்பின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்புவெளியிட்டு, அக்டோபர் 6, 7-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் வருடாந்திர கால அட்டவணையில் அறிவித்தது. ஆனால், தொடர் முறைகேடுகள் மற்றும் வழக்குகள் காரணமாக 2018-ல் தேர்வு வாரியம் ஒரு தேர்வைக்கூட நடத்தவில்லை.இந்நிலையில் 2010-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்துபணியாற்றி வரும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் வேலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு சட்டத்தின்படி 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாவிட்டால் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு அவர்களின் பதவி பறிக்கப்படும்.அந்த வகையில் தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டும் 800 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபின் தகுதித்தேர்வை நடத்த தேர்வு வாரியம்முயற்சித்து வருகிறது. ஆனால்,தேர்வுமுடிவுகளை வெளியிட குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும். எனவே சிறப்பு தகுதித்தேர்வை அரசு உடனே நடத்த வேண்டும். இல்லையெனில் காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்’’ என்றனர்
No comments:
Post a Comment