எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.19

Monday, February 4, 2019

திருக்குறள்


அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் :151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

விளக்கம்:

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

பழமொழி

Slow and steady wins the race

நிதானமே வெற்றி தரும்

இரண்டொழுக்க பண்புகள்

1.  விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2. என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி

அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.
       - புத்தர்

 பொது அறிவு

1.நாசிக் நகரம் எந்த நதி கரையில் அமைந்துள்ளது?

 கோதாவரி

2. தமிழ்நாடு காகித தொழிற்சாலை (TNPL)எங்கு உள்ளது?

  கரூர்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

அவுரி இலை



1. அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.

2. தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும். வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

English words and Meaning

Rampart.  கோட்டை
Rampant தீவிரமான
Ransom. மீள்,மீட்டல்
Raiment.  துணி,உடுப்பு
Recommend சிபாரிசு

அறிவியல் விந்தைகள்

பெனிசிலின்
* மருந்துகளின் இராணி ஆகும்
*இது பாக்டீரியாத் தொற்றைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு எதிரி உயிரி அல்லது நுண்ணுயிரி கொல்லி ஆகும்.
* இது பென்சீலியம் நொட்டேடம் எனும் பூஞ்சையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
* இதை முதலில் கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளமிங் ஆகும்.
* இதை முதன் முதலில் மருந்தாக பயன்படுத்தியவர் ஹோவார்ட் வால்டர் புளோரே ஆகும்.

Some important  abbreviations for students

* CDMA.   -     Code Division Multiple Access

* CCTV  -   Closed Circuit Television

நீதிக்கதை

முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார்.

அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது.

எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார்.

ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர்.

முனிவர் மன்னரை நோக்கி, “”இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்” என்று கூறினார்.

அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் “இதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மன்னர் அமைச்சரை நோக்கி, “”யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்” என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.

நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை.
நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர்.

அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது.

அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர்.

சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான்.

“குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்” என்றான்.

“அதற்கு நாம் என்ன செய்வது?” என்றாள் ரத்னா.

“நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றான்.

ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது – அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன்.

கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது.

ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள்.

இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, “வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்” என்றார் அரசர்.

வேலப்பன் மன்னரை வணங்கி, “பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்” என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான்.

மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது.

சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது.
வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது.

வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது..
திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான்.

ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, “நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்” என்று கூறி, ஆசி வழங்கினார்.

குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.

இன்றைய செய்திகள்
04.02.2019

* கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வற்றி போன தேவம்பாடி குளத்தை விவசாயிகளும், ஊர் மக்களும் புனரமைத்து தற்போது நீர் ததும்ப காட்சியளிக்கிறது.

* யாருக்கு வாக்களித்தோம் என்பதை காணும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்துடன் விவி பேட் கருவி பொருத்தப்பட உள்ளது.

* அரசு நிலங்கள் தொடர்பான விபரம் நில சீர்திருத்த பிரிவில் முறையாக இல்லாததால் கல்வித்துறைக்கு சொந்தமான நிலங்களை கணக்கெடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* நியூசிலாந்து எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

*  டேபிள் டென்னிஸ் விளையாட்டின் உலக தர வரிசை பட்டியலில் தமிழகத்தின் சத்தியன் 28வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Today's Headlines

* In Coimbatore near Pollachi the farmers and the public renovated the Devambadi pond which was in a very dry condition.

* The VV Pad Tool will be equipped with electronic voting machine in all constituencies in the parliamentary election to see who has voted.

* All chief education officers have been ordered to register their educational land holdings as there is no proper land scam in Land Reform Division.

* India won by 35 runs in the 5th one-day international against New Zealand. This led to a 4-1 series win.

* Sathyan has moved to 28th place in the list of world class rankings in table tennis game.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One