தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏழு லட்சம் பேர் ஜனவரியில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2017 - 18ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2018 ஏப்ரல் முதல் ஜூலை வரை வழங்கப்பட்டது. பின் இந்த அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் என்பது நடப்பு ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.
மேலும் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் டிசம்பர் வரை 5000 ரூபாய்; ஜனவரி முதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். இதன்படி நாடு முழுவதும் ஜனவரி வரை 6.31 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2018 முடிவில் 6.24 கோடியாக இருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கூடுதலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 2018 டிசம்பர் முடிவில் 42.43 லட்சமாக இருந்த வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை இந்தாண்டு ஜனவரி முடிவில் 50 ஆயிரம் அதிகரித்து 42.93 லட்சமாகி உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் 99.83 லட்சம்; குஜராத்தில் 62 லட்சம்; உத்தரபிரதேசத்தில் 56.65 லட்சம்; மேற்கு வங்கத்தில் 39.65 லட்சம்; ராஜஸ்தானில் 38.67 லட்சம் பேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment