புழல் பள்ளி மாணவிக்கு, பெற்றோரால் செய்து வைக்கப்பட இருந்த திருமணத்தை தடுத்து, அம்மாணவியை, தலைமையாசிரியை மீட்டார்.
சென்னை, புழல் அடுத்த புத்தகரம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை; திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி. அவரது மகள், புழல், லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.இந்நிலையில் அவரை, உறவினருக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். நாளை, மாதவரத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தன் பள்ளி தலைமையாசிரியை, செல்ஷியா ஜெபராணியிடம் புகார் செய்தார்.'எனக்கு, பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு செய்துள்ளனர். திருமணம் வேண்டாம்; படிக்கவே விரும்புகிறேன்' எனக்கூறி அழுதார்.
இதையடுத்து, தலைமையாசிரியை, இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார்.
கலெக்டர் உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள், மோரீஸ், மஞ்சுளா ஆகியோர், புழல் போலீசாருடன், நேற்று காலை, மாணவியின் வீட்டிற்கு சென்றனர்.அங்கு, மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம், குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என, விளக்கினர்.மேலும், மாணவியை, அண்ணா நகரில் உள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். மாணவி மற்றும் தலைமையாசிரியையின் துணிச்சல் காரணமாக, குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது
No comments:
Post a Comment