அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் மூலமே நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ்40,000-க்கும் அதிகமான அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,000 என்ற அளவில் ஊதியம் தரப்படுகிறது.இதற்கிடையே சிறப்பு காலமுறை ஊதிய பணியிடங்களை காலமுறை ஊதியமாக மாற்றித்தரக் கோரி துப்பரவுப் பணியாளர் கள் 2014-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதன் விசாரணையின் முடிவில் காலமுறை ஊதிய பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின்படி துப்பரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, பணப் பலன்களை வழங்குவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘அரசுப் பள்ளிகளில் 2010-ல் 2001 காவலர் பணியிடங்கள் காலமுறை ஊதியத்திலும், 2,999 துப்புரவுப் பணியிடங்கள் சிறப்பு காலமுறை ஊதியத்திலும் நிரப்ப அனுமதிக்கப்பட்டது.இதில் நேரடி நியமன முறையில் 1,495 இரவு காவலர் பணியிடங்களும், 2,213 துப்புர வாளர்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இவர்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவாளர்கள் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பின்படி 2,213 துப்புரவுப்பணியாளர்களில் இப்போது பணியில் உள்ள 1,694பேருக்கு மட்டும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேநேரம் இனி வரும் காலங்களில் 2012-ம்ஆண்டு மார்ச் 2- ம் தேதி வெளியிடப்பட்ட ஆணையின்படி உருவாக்கப்பட்ட அனைத்து துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்படாது.
மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 2,213 துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாது. இனிமேல் துப்புரவுப் பணியிடங்கள் வெளிமுகமை (OUTSOURCING) மூலமாக மட்டுமே நிரப்பப்படும். இதற்கான ஆணைகள் தனியாக பிறப்பிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.இந்த அரசாணையில் அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் மூலம் மட்டுமே நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 56-லும், “வரும் காலத்தில் அரசுப் பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.இதன்மூலம் அரசுத்துறையில் உருவாகும் காலியிடங்களின் பணி நியமனம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணை 56-ன் படி அரசுத்துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் எல்லாம் தனியார் முகமை மூலமாக நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தித்தான் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்வதாக மக்களை திசை திருப்பி போராட்டத்தை அரசு நீர்த்துப் போகச் செய்தது.இப்போது பள்ளிக் கல்வித் துறையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் மூலம் அதன் பாதிப்பு அடித்தட்டு பணியாளர்களிடம் இருந்து தொடங்கியுள்ளது. இவை மற்ற துறைகளுக்கும் தொடரும்.எனவே, தமிழகத்தில் அரசுப் பணியிடங்கள் அனைத்தும் இனி அவுட்சோர்சிங் மூலமே நிரப்பப்படும்.
இதன்மூலமாக அனைத்து தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல் வாழ்வாதாரத்தை அவர்கள் இழக்கப் போகிறார்கள்.தமிழகத்தில் வேலைவாய்ப்பு மையத்தில் படித்த இளைஞர்கள் 82 லட்சம் பேர் வரை வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்குஅரசு சொல்லும் பதில் என்ன? அரசுப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.எனவே, தமிழக அரசு உடனே இந்த அரசாணையை ரத்து செய்து அனைத்து துறை சார்ந்த பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப முன்வர வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment