துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5-வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் நடைபெற்றது. இதனை ஹாலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார். சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி(36) வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார். இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.
ஆப்பிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கத்தையும், புதிய அத்தியாயத்தையும் சந்திக்கிறோம் என சர்வதேச அளவில் விருது வென்றது குறித்து பீட்டர் தெரிவித்தார். இப்போது நான் பெற்ற விருது எனக்கானது அல்ல எனவும், எனது நாட்டின் மாணவர்களுக்கானது என கூறினார். என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன் என தெரிவித்தார். இந்த விருது அவர்கள் மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் கூறினார். சர்வதேச அளவில் 10 இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை பெற்றுள்ளேன். இதுவே மிகப்பெரும் உத்வேகம் தருகிறது என கூறினார். விருது பெற்ற ஆசிரியரை கென்யா பிரதமர் உகுரு கென்யட்டா பாராட்டியுள்ளார். 'உங்கள் சாதனை சரித்திரம், ஆப்பிரிக்காவின் சரித்திரமாகும். இளம் சாதனையாளர்களால் இந்த நாடு முன்னேறும்' என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment