மாணவர்கள் அனைவரும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக உறுப்பினர் - செயலர் அலோக் பிரகாஷ் மித்தல்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் அவர் மேலும் பேசியது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கடந்த 50 ஆண்டுகளாக மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, இணையதளம் உள்ளிட்டவற்றின் விழிப்புணர்வுக்குப் பிறகு வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் அறிவியல், தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது. புதிய சிந்தனைகள் உருவாகியுள்ளன. இந்த வளர்ச்சிகள் குறித்து பாடத்திட்டங்களில் கொண்டு வரப்பட வேண்டும்.
வருங்காலங்களில் நமது தொழில்நுட்பங்கள் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறோம். மாணவர்கள் அனைவரும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார் அலோக் பிரகாஷ் மித்தல்.
விருது அளிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் எம். லஷ்மணன், சென்னை கணித அறிவியல்கள் நிறுவன சிறப்புப் பேராசிரியர் ஜி. பாஸ்கரன் ஆகியோருக்கு சாஸ்த்ரா - ஜி.என். ராமச்சந்திரன் விருதும் ரொக்கப் பரிசும், பெங்களூரு ஜலஹள்ளி நானோ மற்றும் சாப்ட் மேட்டர் அறிவியல் மைய இயக்குநர் ஜி.யு. குல்கர்னி, மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் ஆர். முருகவேல் ஆகியோருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆர். ராவ் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. மேலும், சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருது 2018 ஆம் ஆண்டுக்கு அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈஸ்வர் கே. ஹரிஹரனுக்கு வழங்கப்பட்டது. இதே விருது 2019 ஆம் ஆண்டுக்கு அமெரிக்க பேராசிரியர் அல்ஜான்ட்ரோ சான்செஸ் அல்வாரடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன், பதிவாளர் ஆர். சந்திரமெளலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment