மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பொதுப்பயிற்சி மேலாண் இயக்குனரகமான டிஜிடி, தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 70 அரசு தொழில்நுட்ப பயிற்சி மையங்களும், 490 தனியார் ஐடிஐக்களும் இயங்கி வருகின்றன.
தற்போது மத்திய அரசின் டிஜிடி 2019 முதல் கம்ப்யூட்டர் மூலம் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஆன்லைன் தேர்வை ஐடிஐ பயிற்சிக்கு கட்டாயமாக்கியுள்ளது. இது ஐடிஐ பயிலும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஐடிஐக்களில் எலக்ட்ரீசியன், ஒயர்மேன், பிட்டர், மெஷினிஸ்ட், கம்பியாளர், வரைபடவாளர், தோல் பொருள் உற்பத்தி என பல்வேறு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் 8 முதல் 10ம் வகுப்பு பயின்றவர்கள் சேரலாம். இப்பயிற்சி 90 சதவீதம் செய்முறை சார்ந்ததே. தேர்வும் அதை போன்றதே. எழுத்துத்தேர்வும் அட்ஜெக்டிவ் முறையிலானது. தற்போது ஐடிஐ தேர்வுக்கு ஆன்லைன் நடைமுறையை அமல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று ஐடிஐ பயிற்சி பெறும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஐடிஐ தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தங்களால் நிச்சயம் இத்தேர்வை எதிர்கொள்ள இயலாது என்றும், இதுவரை எந்தவித மாதிரி தேர்வும் கூட நடத்தப்படவில்லை என்றும், கம்ப்யூட்டர் தொடர்பான எந்தவித அடிப்படையும் அறியாத தங்களால் தேர்வை எதிர்கொள்வது கடினம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஐடிஐ ஆசிரியர்கள் கூறுைகயில், ‘இது ஐடிஐக்களை முற்றிலும் அழிக்கும் செயல். அடித்தட்டு மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், கற்றல் திறன் குறைந்தவர்களை தொழில்பிரிவிலாவது திறன்மிக்கவர்களாக ஆக்கும் மையமாகவும் ஐடிஐக்கள் விளங்குகின்றன. இதில் ஆன்லைன் தேர்வு நடைமுறையை செயல்படுத்துவது தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களையே வளர்ச்சியடைய செய்யும். கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழிலேயே சிரமம் என்ற நிலையில் முற்றிலும் ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment