சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.
உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
பித்தத்தைச் சரிசெய்வதால், 'பித்த நாசினி' என சித்த மருத்துவத்தில் சீரகத்தைப் புகழ்கிறார்கள்.
200 கிராம் சீரகத்தில், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை விட்டு, நன்றாகக் கலந்து காயவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதை அரைத்துப் பொடித்துவைத்து, தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டுவந்தால் ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.
சீரகம், சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும். சீரகத்தை வறுத்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்க, உயர் ரத்த அழுத்தம் குறையும். இருமல், சளி நீங்கும்.
கருஞ்சீரகம்:
மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.
கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும்.
சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment