விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்விச்சீர் வழங்கினர்.
விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் மொத்தம் 87 பேர் பயின்று வருகின்றனர். பள்ளிக்குச் சில தேவைகள் இருந்ததால் மாணவர்களின் பெற்றோர், கிராம பொதுமக்கள் இணைந்து பள்ளி மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் வழங்க திட்டமிட்டனர். அதன்படி பள்ளிக்குத் தேவையான பீரோ, பாத்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள், மின்விசிறி, மேசை உள்ளிட்ட பொருள்களை பள்ளிக்கு கல்விச்சீராக வழங்கினர் .
அப்போது மாணவர்கள் புலி வேடமிட்டு ஆடியபடியும், சிலம்பம் சுற்றியபடியும் ஆரவாரத்துடன் ஊர்வலமாக வர பள்ளிக்குச் சீர் வழங்கப்பட்டது.
கல்விச்சீர் கொண்டு வந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்களைப் பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ``பள்ளிக்கு ஏற்கெனவே பல விருதுகள் கிடைத்துள்ளன. ஆசிரியர்களான நாங்களும் விருது வாங்கியுள்ளோம். மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். நாங்களும் எங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் நன்கொடை வாங்கியுள்ளோம். ஆனாலும், கிராம மக்கள்தான் அதிக பொருள்களை வழங்கியுள்ளனர். தற்போது 3 பீரோ, நூலகத்துக்குத் தேவையான லைப்ரரி ரேக், டேபிள், வாளி, குடம், ஆம்ப்ளிஃபயர், மைக் என ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கிடைத்துள்ளன'' எனத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment