மேலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டதன் பயனாக இதுவரை 33 பேர் கண்தானம் செய்து அசத்தியுள்ளனர். மேலூர் அருகே வடக்கு வலையபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு பயிலும் மாணவர்கள் நீர் மேலாண்மை, மரக்கன்று நடுதல், கருவேல மரங்களை அகற்றுதல், நூலக பயன்பாடு என சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளில் மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் மாணவர்கள் கடந்த 2 ஆண்டாக மேற்கொண்ட கண்தான விழிப்புணர்வால் இக்கிராமத்தில் மட்டும் 33 பேர் கண்தானம் செய்து அசத்தியுள்ளனர். இதற்கு ஆசிரியர் சதீஷ்குமார் வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதலில் கிராமமக்களின் கண்தான விழிப்புணர்வு பற்றி கூறியபோது யாருமே ஆர்வம் காட்டவில்லை. மாறாக கண்தானம் என்றால் கண்ணை பிடுங்கி எடுப்பார்கள் என அச்சப்பட்டனர்.
அதன்பின் தான் கண் இல்லாதவர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கு கண் கிடைத்தால் வாழ்க்கை முறை மாற்றம், மகிழ்ச்சி குறித்து விவரிக்கப்பட்டது.
இதற்கு முன்மாதிரியாக இப்பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியர்கள் தங்கள் கண்களை தானம் செய்தனர்.
அதன்பின் இவ்வூரை சேர்ந்த வளர்மதி என்ற பெண் முதன்முதலில் தனது கண்ணை தானம் செய்ய முன் வந்தார்.
தொடர்ந்து மாணவர்களின் கண்தான விழிப்புணர்வு கிராமத்தில் பரவ துவங்கி இதுவரை 33 பேர் கண்தானம் தந்துள்ளனர்.
கல்வி மட்டுமல்லாது சமூக செயல்பாடுகளுக்கும் முழு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியை சத்தியபாமாவுக்கே இந்த பெருமை சேரும்’ என்றார்.
அரசு பள்ளி என்றால் பெயருக்கு பாடங்கள் நடத்தி, மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் மத்தியில் இப்பள்ளி முன்மாதிரியாக செயல்படுவதை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

No comments:
Post a Comment