பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வின் தீர்ப்பை ெசயல்படுத்த வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் நேற்று காலை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை காலியாக உள்ள உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 2017ம் ஆண்டு போட்டித் தேர்வு நடந்தது. அதில் 35 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியானது, அதைத் தொடர்ந்து சான்று சரிபார்ப்பும் நடந்தது.
அதன்பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணி நியமனத்துக்கான தெரிவு பட்டியலும் வெளியானது. அந்த பட்டியலில் உடற்கல்வி ஆசிரியர்கள் 532 பேர் உள்பட 1080 பேர் தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் பணி நியமனம் என்பது இன்னும் நடக்கவில்லை. இதுதொடர்பாக நான்கு முறை முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, அந்த பணி நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் நான்கு வாரங்களுக்குள் 532 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தீர்ப்பில் கூறப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் பணி நியமனம் செய்வதில் சம்பந்தப்பட்ட துறை காலதாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்கள் 150 பேர், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்தனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்தித்தனர். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமர்வு வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஆர்பி தலைவர் தெரிவித்தார்.
இதையடுத்து, உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமைச் செயலகம் சென்று முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment