தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கு முழு ஊதியம் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான கடைசி வேலைநாள் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்.13 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்கு 3 அரை நாள்கள் வீதம் பணி புரிந்தால் மட்டுமே அந்த மாதத்துக்கான முழு ஊதியம் பெற இயலும். ஆனால் வரும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் இரண்டு வாரங்கள் மட்டுமே செயல்படும். இந்த நாள்களில் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் மற்றும் பள்ளி ஆண்டு விழா போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏப்ரல் முதல் இரு வாரங்களில் 6 அரை நாள்களிலும் மற்றும் தலைமையாசிரியர்களால் வழங்கப்படும் பணிபுரிவதற்கான கால அட்டவணையைப் பின்பற்றியும் ஏப்.12, 13 ஆகிய நாள்கள் வரை பணிகளில் ஈடுபடுத்தி ஏப்ரல் மாதம் முழு ஊதியம் வழங்கலாம். பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றாத நாள்களில் ஊதியம் பிடித்தம் செய்து வழங்கப்படும் என்பதால், விடுப்பு எடுத்த நாள்களுக்கு ஊதியம் வழங்க இயலாது. எனவே உரிய அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment