தனது கல்விப்பணியில் புது யுக்திகளைக் கையாண்டு 361 மாணவர்களை இளம் விஞ்ஞானி மாணவர்களாக உருவாக்கியது மட்டுமல்லாமல், 100 நிமிடங்களில், 100 இயற்பியல் பரிசோதனைகள் செய்து, கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கரூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தனபால்.
ஆசிரியர் தனபாலுக்கு பாராட்டு
கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக தனபால் 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னால், `தான் ஒரு விஞ்ஞானியாக உருவாக வேண்டும்' என்ற தனது கனவு பொய்த்துப்போக, தன்னைப்போன்ற கிராமப்புற மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி அழகு பார்த்து வருகிறார். இதற்காக, பள்ளியை ஓர் ஆய்வுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறார். தினமும் ஆசிரியர் தனபால் வருகையை இளம் விஞ்ஞானிகள் மாணவர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர்
ஆசிரியர் தனபால், `ஏன், எதற்கு, எப்படி?' என்ற கேள்விக்கணைகளைத் தொடுக்க, மாணவர்கள் அதற்கான விடையைத் தேடும் முயற்சியில், செய்தித்தாள் வாசிக்க நூலகங்களை நாடிச் செல்வர். மேலும், அறிவியல் களப்பணம், அறிவியல் நாடகம், விநாடி வினா, ஆய்வுக்கட்டுரை, அறிவியல் கண்காட்சிகள் என மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஜப்பான், பின்லாந்து, சுவீடன் உட்பட பல மேலை நாடுகளுக்கு அரசுத் திட்டம் மூலம் 72,000 கி.மீ அறிவியல் பயணத்தை, பேருந்து, ரயில், கப்பல், விமானங்களில் மாணவர்களுடன் தானும் பயணிக்க வழிகாட்டியாக இருந்துள்ளார். இதற்காக, 339 மேடைகளில் பங்கேற்று, 27 முதல் பரிசு, 29 தங்கம், 45 விருதுகள் பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை சேர்க்கச் செய்துள்ளார். இச்செயல் கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், தானும் அறிவியல் கண்காட்சிகளில் மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய அளவில் பங்குபெற்று, தென்னிந்திய அளவில் இரண்டாம் பரிசுப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஆசிரியர் தனபாலின் உலகசாதனை முயற்சி
மாணவர்கள் இயற்பியல் பாடப் பகுதியை கடினமான மனநிலையுடன் அணுகுகிறார்கள். இதைப்போக்க வேண்டும், மாணவர்கள் விரும்பி இயற்பியல் பாடப் பகுதி விதிகள், கோட்பாடுகளைப் புரிந்து படித்து, புதிய கண்டுபிடிப்புகள் காணும் விதத்தில் 100 நிமிடங்களில், 100 இயற்பியல் பரிசோதனைகளை, பயன்படுத்திய பொருள்களான காகித அட்டை, செய்தித்தாள், பந்து, பாட்டில், பலூன் ஆகியவற்றைப் பயன்படுத்தி அறிவியல் விதிகளான நியூட்டன், பாய்ல்ஸ், சார்லஸ், ஐன்ஸ்டின், மாக்ஸ்வெல், பிளமிங், பாரடே, ராலே ஒளிச்சிதறல், ஒயர்ஸ்டெட், ராமன் விளைவு, கூலும் விதி, ஜூல் விதி, சீபெக் விளைவு ஆகிய விஞ்ஞானிகளின் விதிகளைப் பரிசோதனைகளாக செய்து உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு பள்ளி இளம் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் இன்று காலை 8.05 க்கு தொடங்கி சரியாக 9.25 மணிக்கு நிறைவுபெற்றது. 100 பரிசோதனைகளை, 80 நிமிடங்களில், சராசரியாக 48 விநாடிகளில் இடைவெளி இன்றி செய்து காட்டி, உலக சாதனை நிகழ்த்தினார். இந்நிகழ்வை, கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளது.
இதுபற்றி, ஆசிரியர் தனபாலிடம் பேசினோம். ``நான் படிக்கும் காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். என் குடும்பச் சூழல் என் கனவை சிதைத்தது. இருந்தாலும், மதிப்புமிக்க ஆசிரியர் வேலை எனக்கு கிடைத்தது. அதன்மூலம், நான் ஆகமுடியாத விஞ்ஞானி கனவை மாணவர்களை ஆக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆர்வமுள்ள மாணவர்களை அறிவியல், கண்டுபிடிப்பு, ஆய்வுகளில் இறங்கவைத்தேன். பல மாணவர்கள் ஆர்வமுடன் பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தனர். இருந்தாலும், எனக்குள் இருந்த அந்தக் கனவு நனவாகவில்லையே என்கிற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த உலக சாதனை மூலம் ஓரளவு அதை ஈடுகட்டிவிட்டதாக நினைக்கிறேன். எனது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 20 அப்துல்கலாமையாவது என் பணிநாள்களில் உருவாக்கிவிட வேண்டும் என்பதை லட்சியமா வச்சு செயல்படுகிறேன்" என்றார் உறுதி மேலிட!
No comments:
Post a Comment