எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஏப்.19-இல் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: ஏப். 22 முதல் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

Wednesday, April 17, 2019




பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என்றும் அதற்கு அடுத்த நாளே (ஏப்.20) மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கானத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதள முகவரியில் வெளியிடப்படவுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்திருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இதையடுத்து சனிக்கிழமை (ஏப். 20) காலை 9 மணி முதல் ஏப்.26-ஆம் தேதி வரையிலான நாள்களில் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் வரும் 24-ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 26-ஆம் தேதி வரையிலான நாள்களில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணை யதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு...: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 22-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 24-ஆம் தேதி புதன்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர் அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
கட்டணம் எவ்வளவு?: விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
சிறப்புத் துணைத் தேர்வுகள் எப்போது?: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.
சிறப்புத் துணைத் தேர்வு (ஜூன் 2019) ஜூன் 6-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரையிலான நாள்களிலும், பிளஸ் 1 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 14 முதல் ஜூன் 21 வரையிலான நாள்களிலும் நடைபெறவுள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One